கனிவுடன் உபசரிப்போம்
சிலரது வீடுகளுக்குள் நுழைந்தால், பேச்சாலேயே விரட்டி விடுவர். அந்தளவுக்கு வார்த்தைகளில் கடுமை இருக்கும். கனிவாகப் பேசுவதையே நாயகம் விரும்புகிறார்.
நம்மைக் காண வருபவர் எத்தகைய ஏழையாக இருந்தாலும், இதை கடைபிடிக்க வேண்டும். ஒருசமயம், ஒருவர் நாயகத்தை காண காத்து நின்றார். இது பற்றி, நாயகத்திடம் தகவல் சொன்ன போது, “அவன் நல்லவன் இல்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச் சொல்லுங்கள்” என்றார். அந்த மனிதரிடம் பரிவுடன் பேசி வழியனுப்பினார். அந்த மனிதர் சென்ற பிறகு, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” எனக் கேட்டார். அதற்கு நாயகம், “இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு மற்றவர் உறவாட இடம் தராமல் கடுமையாக பேசுபவன் தான்” என பதிலளித்தார்.
இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.
ஒருசமயம் தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, நாயகத்தின் செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அதில் அவரை அமரச் செய்தார். பின்னர் ஹலீமாவின் தாயார் வரவே, அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச் செய்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்து கொண்டு, அவர்களுக்கு விரிப்பைக் கொடுத்தார். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம்.
நம்மைத் தேடி வருபவர்களிடமும் கனிவுடன் உபசரிப்போம்.