கவுரவக்குடில்!
குளிர் போக்க கணகணப்பாக நெருப்பு எரிந்தபடி இருந்தது. முக்கோணத்தின் மூன்று முனைப் புள்ளிகள் போல் அஸ்வத்தாமனும், கிருதவர்மனும், கிருபரும் நெருப்பில் குளிர் காய்ந்தபடி இருந்தனர். அருகில் அவர்களின் தனுராயுதம்! அஸ்வத்தாமன் முகத்தில் எல்லையில்லா கோபமும் வருத்தமும் வெளிப்பட்டது. அதைக் கண்ட கிருபர், “என்ன அஸ்வத்தாமா... அடுத்த திட்டம் என்ன?” “அது குறித்து தான் யோசிக்கிறேன்” “இனியும் போரிட்டு பயனில்லை. நாம் உயிர் வாழ்வதில் கூட பொருள் இருப்பதாக தெரியவில்லை. இத்தீயில் குதித்து ஆத்ம சுத்தியாவது அடையலாமா என எண்ணுகிறேன்...” “இதை விட எதிரியின் வாள் பட்டு மடிவது மேல் கிருபரே...” “உணர்ச்சி வசப்படுகிறாய் அஸ்வத்தாமா... நம்மை இப்போது பாண்டவர்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். நாம் களத்தில் நின்றால் எதிர்கொள்ள திருஷ்டத்துய்மன் போல் யாராவது களத்திற்கு வருவார்கள்... அவர்களோடு மோதுவதை விட தீப்பாய்வது மேல்...”
“கிருபரே... அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது போல பேசுகிறீரே... நான் அப்படி எண்ணவில்லை” “ஆச்சரியமாக இருக்கிறது... இனி நம்மால் என்ன செய்ய முடியும் என்று நீ எண்ணுகிறாய்?” “எதையும் செய்ய முடியும் என்றே எண்ணுகிறேன்” “உன் நம்பிக்கை வியப்பு அளிக்கிறது. பாண்டவர்களில் சாமான்ய வீரன் கூட இப்போது வெற்றிக்களிப்பில் மனோ பலத்துடன் இருப்பதை மறந்து பேசுகிறாய்...” “அவர்கள் இருந்து விட்டு போகட்டும். நேருக்கு நேர் மோதுவதாக இருந்தால் அல்லவா அந்த கவலை?” “என்ன சொல்கிறாய் நீ?” “அவ்வளவு பேரும் அயர்ந்து உறங்கும் போது தீ வைத்துக் கொளுத்தினால்...?” அஸ்வத்தாமன் கேட்கவும், ’ச்சீய்’ என்று கோபித்தார் கிருபர்! கிருதவர்மனோ அமைதியாகப் பார்த்தான்!