உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவிலில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

பெண்ணாடம்: விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம் கோவில்கள் மற்றும் வடலுார் சத்யஞான சபை ஆகிய இடங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார். திருச்செந்துார் கோவிலில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தவும், கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள், கோவில் மற்றும் அதன் சொத்து பராமரிப்பு குறித்து ஆவணங்கள், கோவில் அலுவலகப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலுார் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6:00 மணியளவில் ஆய்வு நடத்தினார். அப்போது, கோவில் வளாகம் அதன் பராமரிப்பு, ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்துள்ள விபரம், கோவில் கட்டணச் சீட்டு விற்பனை விவரம், பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பிட வசதி, தேர் நிறுத்துமிடம் மற்றும் அதன் பாதுகாப்பு, கோவில் பாதுகாப்பு அம்சம், சிலைகளின் விலை மதிப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கணக்கர் மலையப்பன் உடனிருந்தார். இதே போன்று, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில், வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து கோவில்களிலும் ஐகோர்ட் அறிவுறுத்திய அம்சங்கள் அடங்கிய படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !