உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு : ஏனாமில் கணபதி நவராத்திரி கோலாகலம்

ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு : ஏனாமில் கணபதி நவராத்திரி கோலாகலம்

ஏனாம்: ஏனாமில், விநாயகருக்கு படையலிடப்பட்ட, 100 கிலோ எடையுள்ள லட்டு, ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம், ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஏனாமில் விநாயகர் சதுர்த்தி விழா, கணபதி நவராத்திரி என்ற பெயரில், 9 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தினசரி ஹோமம், பஜனை, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

மேலும், பல்வேறு இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு, பிரமாண்டமான லட்டுகள் படைக்கப்படும். கணபதி நவராத்திரி விழா முடிந்தவுடன், லட்டுகள் ஏலம் விடப்பட்டு, ஏலத்தில் கிடைக்கும் தொகை அன்னதானத்துக்கு பயன்படுத்தப் படும். ஏனாமில் கனகலபேட்டா என்ற இடத்தில் சித்தி விநாயகருக்கு படையலிடப்பட்ட 100 கிலோ எடையுள்ள லட்டு, ஏலம் விடப்பட்டது. இந்த லட்டை ஏலம் எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது. பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். நிறைவில், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு, கடம்செட்டி வெங்கட ராமமூர்த்தி என்பவர் ஏலம் எடுத்தார்.

கோபாலா நகரில், விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதுபோல, ஏனாமில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் லட்டு ஏலம் விறுவிறுப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !