அருப்புக்கோட்டை குப்பை மேடான கோயில் ஊரணி: கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள கோயில் ஊரணியை குப்பை மேடாக மாற்றிய நகராட்சியை அறநிலையத்துறை கண்டு கொள்ளாமல் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இங்குள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலு க்கு சொந்தமான நீராவி பிறமடை ஊரணி,திருச்சுழி ரோட்டில் கோயிலுக்கு அருகில் உள்ளது.
அக்காலத்தில் ஊரணியில் மழை நீர் நிறைந்து பிறமடை ஓடை வழியாக கோயிலுக்கு சொந்த மான தெப்பத்தை அடையும். ஒரு ஏக்கர் 86 சென்ட் பரப்பளவில் இருந்த ஊரணியில் தற்போது 20 சென்ட் வரை ஆக்கிரமிப்பில் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத ஊரணியில் குப்பை , கட்டட கழிவுகளை கொட்டி மூடி விட்டனர்.
தற்போது நகராட்சியின் குப்பை கொட்டும் இடமாக ஊரணி மாறி உள்ளது. தெப்பத்திற்கு மழை நீர் செல்லும் ஓடையும் பராமரிப்பு இன்றி முட்புதர்கள், செடி கொடிகள் வளர்ந்துள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தி வரும் அரசு, ஊரணியை மூடி குப்பை மேடாக்கியதை என்னவென்று சொல்வது என்கின்றனர் மக்கள்.
இதை இந்து அறநிலையத்துறையும் கண்டு கொள்வதில்லை. குப்பை மேடாக உள்ள ஊரணியை சீர்படுத்தி மழைநீரை தேக்கி தெப்பத்திற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.