ஈரோடு விஜயதசமி நாளில் வித்யாரம்பம் நிகழ்வு
ADDED :2549 days ago
ஈரோடு: விஜயதசமியை ஒட்டி, பல்வேறு இடங்களில் வித்யாரம்பம் நடந்தது. நவராத்திரி விழா முடிந்த மறுநாள், விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகிறது. மழலைகளுக்கு கல்வி தொடங்க உகந்த நாளாக கருதப்படும் இந்நாளில், வித்யாரம்பம் நடக்கிறது. ஈரோடு ராமபக்தர் ஆஞ்சநேயர் கோவிலில், இந்து தர்ம வித்யா பீடம் சார்பில், வித்யாரம்பம் நேற்று நடந்தது. மூங்கில் முறத்தில் பரப்பிய பச்சரியில், மஞ்சள் கிழங்கை, எழுத்தாணியாக கொண்டு, குழந்தைகள் கையை பிடித்து, அ எழுதி பழக்கினர். அதை தொடர்ந்து, குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதினர். இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வியை புகட்டிச் சென்றனர். கல்வி பழகிய குழந்தைகளுக்கு பென்சில், சிலேட் வழங்கப்பட்டது. அதேபோல் பலர், வீடுகளில் பாடப்புத்தகங்களை வைத்து வழிபட்டனர்.