உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ‘கத்தி போடும்’ திருவிழா: பக்தர்கள் பரவசம்

கோவையில் ‘கத்தி போடும்’ திருவிழா: பக்தர்கள் பரவசம்

கோவை:  விஜயதசமியை முன்னிட்டு, கோவையில், பக்தர்கள் கைகளிலும், வயிற்றிலும், கத்தியால் வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக சென்று, ராமலிங்கசவுடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை ரங்கே கவுடர் வீதி, ராஜவீதி ஆகிய இரு இடங்களிலும், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அக்., 10 முதல், நேற்று வரை, அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்களும், வழிபாடுகளும் நடந்தன.நவராத்திரி உற்சவ நிறைவான நேற்று, தேவாங்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு  நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சாய்பாபா காலனி, அண்ணாமலை சாலை, விநாயகர் கோவிலிலிருந்து நேற்று அதிகாலை, பக்தர்களின் ஊர்வலம் நடந்தது.

இளைஞர்கள், தங்கள் கைகள் மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வரவழைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். தெலுங்கில், ‘வேசுக்கோ, தீசுக்கோ’ – போட்டுக்கோ, வாங்கிக்கோ – என  கோஷம் எழுப்பினர். ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்த, உறவினர்கள் மஞ்சள் பொடியை ரத்த காயத்தின் மீது துாவினர். கத்தி போடும் ஊர்வலம், மேட்டுப்பாளையம் சாலை வழியாக, ராஜவீதி சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. ஆர்.எஸ்., புரம் ராமச்சந்திரா சாலையிலுள்ள விநாயகர் கோவிலில் துவங்கிய மற்றொரு கத்தி போடும் ஊர்வலம், ரங்கேகவுடர் வீதியிலுள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது.முன்னதாக, விநாயகர் கோவிலிலிருந்து, கும்ப தீர்த்தத்துக்கு புண்யாகவாசனம் செய்து,  ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், கோவிலுக்கு  அழைத்து வரப்பட்டார்.  மாலை, 6:00 மணிக்கு, ராஜவீதி சவுடேஸ்வரி அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு,  நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து, தெப்பக்குளம் மைதானத்தில் வன்னிமர பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !