உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரள முதல்வர் பினராயி மிரட்டல்: தேவசம்போர்டு மீண்டும் பல்டி

கேரள முதல்வர் பினராயி மிரட்டல்: தேவசம்போர்டு மீண்டும் பல்டி

சபரிமலை: முதல்வர் பினராயி விஜயனின் மிரட்டல் தொனி பேச்சு காரணமாக, உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதில் இருந்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு பின்வாங்கியது.

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை அமல்படுத்த கேரள மாநில அரசு எடுத்த முயற்சி, எல்லா கட்டத்திலும் தோல்வி அடைந்தது.5 நாட்களில் 15 பெண்கள் வந்தனர். ஆனால் ஒரு பெண் கூட சன்னிதானத்தின் பக்கம் செல்ல முடிய வில்லை. அந்த அளவு பக்தர்களின் போராட்டம் வலுவாக இருந்தது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன், தனது அரசு தீர்ப்பை அமல்படுத்தும் என்று உறுதி படக்கூறி வருகிறார். பத்தணந்திட்டை யில் இடது முன்னணி சார்பில் நடந்த அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் தேவசம் போர்டை எச்சரித்தார். இந்த விஷயத் தில் சிலர் காட்டும் பூச்சாண்டி வேலைகளை கண்டு திருவிதாங்கூர் தேவசம்போர்டு உச்சநீதி மன்றத்திற்கு சென்றால் வடி கொடுத்து அடி வாங்குவது போல் இருக்கும் (அதாவது கம்பை கொடுத்து அந்த கம்பால் அடிவாங்குவது )என்றார்.

தேவசம்போர்டு அடுத்த பல்டி: முதல்வர் நேற்று முன்தினம் இரவு இப்படி பேசியதால், நேற்று காலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தனது நிலையை மீண்டும் மாற்றியது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதால், முதல்வர் பினராயி கடும் கோபம் அடைந்தார். இதனால் பத்மகுமார் நிலைப்பாட்டை அடுத்த நாளே மாற்றிக் கொண்டார். பின்னர் மறுசீராய்வு மனு செய்யாமல் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தார். பத்தணந்திட்டையில் முதல்வரின் ஆவேசம் கண்ட தேவசம்போர்டு, நேற்று தனது நிலையை மீண்டும் மாற்றிக் கொண்டது.நேற்று நிருபர்களிடம் பேசிய தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ், உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டால் மட்டுமே தேவசம் போர்டு அறிக்கை தாக்கல் செய்யும். அதை தவிர்த்து தேவசம்போர்டு தானாக அறிக்கை தாக்கல் செய்ய சட்டரீதியாக எந்த முகாந்திரமும் இல்லை. பந்தளம் மன்னர் குடும்பம் சொல்வது போல செயல்பட வேண்டிய அவசியம் தேவசம்போர்டுக்கு இல்லை. தேவசம்போர்டுக்கு உரிய விதிகளுடன் செயல்படும், என்றார்.

மார்க்சிஸ்ட் மாஜி எம்.எல்.ஏ.,வான தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தனிப்பட்ட முறையில், 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலை செல்வதை ஆதரிக்கவில்லை. இவரின் நிலைப் பாடில் அதிருப்தியான பினராயி விஜயன், அவரை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார். அவரது முயற்சிகளுக்கு கடும் முட்டுக்கட்டை போடுகிறார். முதல்வரின் நிலைப்பாடு மற்றும் உச்சநீதிமன்ற விசாரணை அடுத்த மாதம் 13-ம் தேதி வரை தள்ளி போவதுபோன்ற காரணங்களால் மண்டல காலம் என்ன ஆகும் என்ற பதட்டம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பந்தளம் மன்னர் குடும்பம் மறுப்பு: சபரிமலை உள்ளிட்ட கோயில்களின் உரிமையாளர் தேவசம்போர்டு அல்ல என பந்தளம் மன்னர் குடும்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது: சபரிமலை வரு மானத்தில் எங்களுக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. ஆனால் 1949 உடன்படிக்கை படி நிர்வாக பொறுப்பு மட்டுமே தேவசம் போர்டுக்கு உண்டு. ஆசாரங்களை மீறாமல் பூஜை நடத்துவோம் என்று அந்த உடன் படிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் கோயிலின் உரிமை அவகாசம் மற்றும் உடன் படிக்கை பற்றி பேச வேண்டி வந்தது.சபரிமலையில் தேவசம் போர்டு ஒரு டிரஸ்ட் மட்டும் தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தாய்- தந்தை மன்னிப்பு: கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து என்பவர் சபரிமலைக்கு செல்ல முயன்றார். பாதி வழியில் போலீசே தடுத்து அவரை பாதுகாப் பாக திருப்பி வீட்டிற்கு அனுப்பியது. சபரிமலைக்கு செல்வதற்காக புறப்பட்ட தங்கள் மகள் பிந்துவை ஐயப்பன் மன்னித்து அருள வேண்டும் என்ற வேண்டுதலுடன், மண்டல சீசனில் இருமுடி கட்டு எடுத்து செல்வோம் என்று தந்தை வாசு, தாய் தங்கம்மை ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிறுவயது முதலே நாங்கள் ஐயப்ப பக்தர்கள் என்றும், தங்கள் மகளின் செயல்பாட்டால் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட மனசங்கடத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !