திருநாவலுார் நம்பியாரூரன் கோவிலில் அமாவாசையில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி
உளுந்துார்பேட்டை: திருநாவலுாரில் நம்பியாரூரன் கோயிலில் நவ.,7 அமாவாசையன்று கும்பாபிஷேம் நடத்துவற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுாரில் நம்பியாரூரன் (சுந்தரமூர்த்தி நாயனார்) மடம் உள்ளது. இது அவர் பிறந்த இடம். உள்ளூர் அர்ச்சர்கள் குடும்பத்தினரால் பரம்பரரை பரம்பரையாக தனிமடமாக நிர்வாகம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடம், காலப்போக்கில் சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் ‘தம்பிரான் தோழர் அறக்கட்டளை’ என்ற பெயரில் மடத்தை கோயிலாக கட்டித் தருகிறோம் என கேட்டுக் கொண்டதின் பேரில், பரம்பரை அறங்காலவர்கள், தம்பிரான் தோழர் அறக்கட்டளைக்கு அனுமதி வழங்கினர். அறநிலையத்துறையும் 4.5 லட்சம் ரூபாய்க்கு திருப்பணி செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. ஆனால் பழைய மடத்தை இடித்து விட்டு கருங்கல் கோயில் அமைத்து கும்பாபிஷேகத்தற்கான ஏற்பாடுகளை
தம்பிரான் தோழர் அறக்கட்டளையினர் செய்கின்றனர். நவ.,7 ம் தேதி கும்பாபிஷேகம் நடப்பதை கேள்விப்பட்டு உள்ளூர் குருக்களும், பரம்பரை அறங்காவலர்களுமாகிய அர்ச்சர்கள், ‘நாங்கள் கும்பாபிஷேகம் செய்கிறோம்,’ என கேட்ட போது, அவர்கள் மறுத்து தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
சுந்தரர் கோயிலில் ஆகம மரபுபடி செய்யாமல், தமிழ்முறைப்படி செய்வது தவறு என அவர்கள் மறுத்திருக்கிறார்கள். மேலும் ‘கூடாத நாள்’ என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறியுள்ள அமாவாசையன்று கும்பாபிஷேகம் செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சித்தது. ஆனால் மடத்திற்கு கும்பாபிஷேகம் செய்கிறோம் என அவர்கள் அனுமதி பெற்றுவிட்டதால், தடையாணை கிடைக்கவில்லை. ஒரு மடத்தை கருங்கல் கோயிலாக கட்டிவிட்டு, மடம் என்று பொய் சொல்லி அனுமதி பெற்றுள்ளனர். இதனால் சிவாச்சாரிய
சங்கத்தினர் பாரம் பரிய சைவ ஆதீனங்களின் ஆதரவை நாடியுள்ளனர். தருமையாதீனம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் காசிமடம் போன்ற ஆதினங்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோயிலுக்கு தமிழ்முறைப்பபடி கும்பாபிஷேகம் நடத்த கூடாது என்றும், அமாவாசையில் கும்பாபிஷேகம் செய்யக்கூடாது என அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மேலும் தை மாதத்திற்கு பின் நல்ல நாளில் ஆகம மரபுப்படி செய்ய வேண்டும், என அறிக்கை வெளியிட்டும் அவ்வாறு நிகழ்த்துமாறு சிவாச்சாரிய சங்கத்தினரை வலியுறுத்தியுள்ளனர்.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், கும்பாபிஷேகம் நடப்பதற்கான பணிகள் மும்முரமாக நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.