உடுமலையை திருமூர்த்தி மலை ஞானபீடத்தில் ஞான உதய தின விழா
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை தென்கயிலை ஞான பீடத்தில் குண்டலினி யோக மூல குரு - தத்துவதவ ஞானி - ஜெகத்மகாகுரு ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகானின் ஞான உதய தின விழாவும் உலக அமைதி தின நூற்றாண்டு விழாவும் இணைந்து வெகு விமரிசை யாக நடைபெற்றது. ஞானக்கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. ஒரு நிமிட அமைதி
அனுஷ்டிக்கப்பட்ட பின் குரு கீதம் - ஞான கீதம் இசைக்கப்பட்டு குருமாதா தலைமையில் அஷ்ட தீபம் ஏற்றப்பட்டது.
அறங்காவலர்கள் கே.விநாயகம் - எம்.சுப்பிரமணியம் - பி.விஸ்வநாதன் மற்றும் யோகக் கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். பின்னர் சர்வ சக்தி சித்தி மகா யக்ஞம் இயற்றப்பட்டது. மகரிஷி பரஞ்ஜோதியாரின் வட அமெரிக்க யாத்திரையின் போது லூயிவில்லியில் பயிற்சி பெற்ற டாக்டர் தேஷ்பாண்டே விளக்கி எழுதியிருந்த அவர்தம்
அனுபவத்தை ராஜா தமிழ்ப்படுத்தி வாசித்தார். குருமகானின் ஐரோப்பா - அமெரிக்க ஆன்மிக யாத்திரை மற்றும் மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற உலக அமைதி தின விழாக்களின் காணொளிக் காட்சிகள் திரையிடப்பட்டன.
தேசியத் திறனாய்வுக் கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற ஆலய யோகக் கல்லூரி மாணவ - மாணவியர் 36 பேருக்கு குருமகான் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார். முத்தாய்ப்பாக ஆசியுரை வழங்கி மகரிஷி பேசுகையில் இயற்கைச் சீற்றங்களிலிருந்து உலகைக் காக்கவும் புவி வெப்ப மயமாவதைத் தடுக்கவும் ஜெகத்மகாகுரு ஞானவள்ளல் காட்டிய வழியில் நின்று பிரபஞ்சத்தைக் காக்கவும் மெய்யுணர்வாளர்கள் மேற்கொள்ள
வேண்டிய இன்றியமையாக் கடமைகளைச் சுட்டிக் காட்டினார்.
உலகப் பொது மறையாம் திருமூலர்தம் திருமந்திரக் கோட்பாடுகள் உருக்கி அமுது ஊற்றெடுத்து உடம்பினொடு உளமும் உயிரும் ஒளிமயமாய் ஆக்கும் திறன் வாய்ந்தவை என விளக்கினார்.
கலந்து கொண்டோர் அனைவரும் தனித்தனியே மகரிஷியிடம் ஆசி பெற விழா இனிதே நிறைவு பெற்றது.