உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலக்கல்லில் ‛பார்க்கிங் செய்ய போலீசிடம் அனுமதி கட்டாயம்

நிலக்கல்லில் ‛பார்க்கிங் செய்ய போலீசிடம் அனுமதி கட்டாயம்

கூடலூர்:சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை நிலக்கல்லில் பார்க்கிங் செய்ய வேண்டுமானால், கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில்
அனுமதிச்சீட்டு பெற வேண்டும். இல்லாவிட்டால் எரிமேலியைத் தாண்டி செல்ல முடியாது என்ற கெடுபிடியால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை நிலக்கல்லில் பார்க்கிங் செய்து விட்டு, கேரள அரசு பஸ்சில் பம்பை வரை செல்ல வேண்டும். ஆனால், தற்போது நிலக்கல்லில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டுமானால், கேரளாவில் தாங்கள் வரும் வழியில் உள்ள ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில், வாகன அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

இவ்வாறு வாகன அனுமதிச்சீட்டு வாங்கும் போது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், வாகன உரிமையாளர் பெயர் மற்றும் பக்தர்கள் எண்ணிக்கை, அலைபேசி எண் போன்ற அனைத்து விபரங்களையும் சேகரிக்கின்றனர். இதனால், போராட்டம் செய்பவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்ற புதிய யுக்தியில் கேரள போலீசார் புதிய கெடுபிடியைத் துவக்கியுள்ளனர்.

அனுமதிச்சீட்டு பெறாத வாகனங்கள் எரிமேலியைக் கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !