சென்னிமலை முருகன் கோவிலில் 24ம் ஆண்டு கார்த்திகை திருவிழா
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கிருத்திகை விழா குழு சார்பில், 24ம் ஆண்டு கார்த்திகை திருவிழா, நேற்று (நவம்., 22ல்)நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 20ல் சென்னி மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், இடும்பன், கடம்பன் மற்றும் கந்தன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
நேற்று (நவம்., 22ல்) அதிகாலை, சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் புறப்பட்டு, கொடுமுடி காவிரிக்கு சென்றனர். ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்தனர். காலை, 10:00 மணிக்கு மேல் தீர்த்த குடங்களுடன், சென்னிமலை நான்கு ராஜ வீதிகளில், மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து, படிக்கட்டுகள் வழியாக, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். இரவு, 7:00 மணிக்கு, சென்னிமலை ஆண்டவருக்கு தீர்த்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.