உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலம் திருக்குற்றாலநாதர்

குற்றாலம் திருக்குற்றாலநாதர்

கார்த்திகைமாத திங்கட் கிழமை சிவவழிபாட்டுக்கு உகந்தது.  இந்நாளில் விரதமிருப்பதை “சோமவார விரதம்” என்பர். “சோகத்தைப் போக்கி சுகம் தரும் சோமவார விரதம்” என சிவனடியார் இதைப் போற்றுவர். திங்களன்று நீராடி,  திருநீறு பூசி, “நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சொல்ல வேண்டும். வீட்டிலேயே சிவபூஜை செய்கிற வழக்கம் இருப்பவர்கள் பூஜை செய்யலாம். அதன்பின் சிவன் கோயிலுக்கும்  சென்று வழிபட வேண்டும்.  விரதமிருப்பவர் ஒருவேளை மட்டும் அதாவது இரவு மட்டும் உண்ண வேண்டும். பால், மோரைத் தவிர்ப்பது நல்லது. அன்று ஒரு தம்பதியரை வீட்டுக்கு அழைத்தோ அல்லது அவர்களின் இருப்பிடம் சென்றோ உணவு வழங்கினால் சிவன் அருள்புரிவார். திங்கட்கிழமையே சிறப்பு என்றால், கார்த்திகை மாத திங்கட்கிழமைக்கு கூடுதல் சிறப்புண்டு.

“கார்த்திகை சோமவார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கைலாயத்தில் இடம் தருவேன்” என சிவன் வாக்களித்ததாக புராணங்கள் சொல்கின்றன. வேதம் கற்ற பண்டிதரை தம்பதி சமேதராக வீட்டுக்கு அழைத்து முடிந்த தானம் அளிப்பதும் நன்மையளிக்கும்.  கார்த்திகை திங்களன்று விரதமிருந்து சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் அளவற்ற நன்மை கிடைக்கும்.  அக்னியின் சொரூபமான சிவனை  குளிர்விக்கவே கார்த்திகை சோம வாரத்தில் (திங்கட்கிழமை) சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. அதாவது, சிவன் மீதுள்ள வெப்பம் சமன் செய்யப்படுகிறது. சங்காபிஷேகம் செய்ய ஜோதிட ரீதியாக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார் சூரியன். அப்போது சந்திரனும் நீச்சத்தில் இருப்பதால் அதை தோஷம் எனச் சொல்வர். இதைப் போக்க சிவனை வழிபடும் விதமாக சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கானது, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகிறது. குளிர்ச்சி மிக்க சங்கில் தீர்த்தம் நிரப்பி அபிஷேகம் செய்யும் போது,  மனம் குளிர்ந்து நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார் சிவன்.  கார்த்திகை மாத நான்கு திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம் நடந்தாலும், மூன்றாவது சோமவாரத்தன்று சங்காபிஷேகம் சிறப்பாக நடக்கும்.  குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடக்கும். இங்கு கார்த்திகை சோமவாரத்தன்று பெண்கள் சுமங்கலி பூஜை நடத்துவர்.  நீராடி குற்றாலநாதர் கோயிலில் வழிபட்டு, அங்கு தரும் குங்குமப் பிரசாதத்தை திருமாங்கல்யத்தில் வைத்துக் கொள்வர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ளது குற்றாலம், நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திர சபை இருப்பது இங்கு தான்! குற்றாலநாதரும், குழல்வாய் மொழியம்மனும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.  மற்ற கோயில் போல இக்கோயில் சதுரவடிவில் இருக்காது. சங்கு வடிவத்தில் அமைந்த கோயில் இது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?  ஒருகாலத்தில் இக்கோயில் பெருமாள் கோயிலாக இருந்தது. குறுமுனிவரான அகத்தியர் வந்த போது பெருமாள் சிலையை தொட்டு, மந்திரம் சொல்லி சிவனாக மாற்றியதாக தலபுராணம் சொல்கிறது. அகத்தியரின் வருகைக்குப் பின் பெருமாளே தானே மெல்ல உடலை குறுக்கி  சிவனாக மாறியதாகவும் சொல்வதுண்டு. இதை நிரூபிக்கும் விதமாக சிவலிங்க பாணத்தின் உச்சியில் அகத்தியரின் ஐந்து விரல்கள் இருப்பதைக் காணலாம்.   அகத்தியர் தன் வலதுகையை அழுத்திய காரணத்தால் சிவனுக்கு தலைவலி ஏற்பட்டதாகவும், அதைப் போக்க தைல அபிஷேகம் நடக்கிறது. குற்றால அருவி, சிவனின் தலைவலியை தொடர்புபடுத்தும் விதமாக “குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத்  தலைஇடியும்” என்றொரு சொலவடையே உருவானது.

மார்கழி திருவாதிரை, சித்ராபவுர்ணமி, திருக்கார்த்திகை திருவிழாக்கள்  சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கோயில் சங்கு வடிவில் இருப்பதால் குற்றாலநாதருக்கு நடத்தப்படும் சங்காபிஷேகம் சிறப்புமிக்கது.  இதை தரிசிப்போருக்கு ஆயுள் விருத்தி ஏற்படும். நாள்பட்ட நோய் தீரும். அஷ்ட ஐஸ்வர்யம் பெருகும்.  சங்காபிஷேக தீர்த்தம் தெளித்தால் பிரம்மஹத்தி உள்பட எல்லாப் பாவமும் பறந்தோடும்.  நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி அபிஷேகம் தரிசிக்க நம் கையாலேயே சங்காபிஷேகம் செய்த புண்ணியபலன் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !