உயிர்களை நேசிப்போம்
* கருவறையில் கடவுளைக் காண்பதால் பயனில்லை. எல்லா உயிர்களையும் நேசிப்பதே உண்மையான பக்தி.
* இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால், இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. கிடைக்கும் நேரத்தில் உங்கள் கடமையை சரி வர செய்யுங்கள்.
* மண்ணில் நட்ட விதை பயிராக வளரும் என்ற நம்பிக்கை இருப்பது போல, கடவுளையும் நம்பிக்கையுடன் வணங்கினால் எதிர்கால வாழ்வு நன்மையாக அமையும்.
* பிறரை வணங்குவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக, நம் ஆணவ எண்ணம் குறையும். * சுயநலத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால், கடவுள் ஆயிரம் அடி விலகிச் சென்று விடுவார்.
* கிணற்றில் விழ ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால், அங்கிருந்து எழுந்து வர பல மணி நேரம் போராட வேண்டியிருக்கும். ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே.
* பாயும் நீரை ஓரிடத்தில் அணையில் தேக்கினால் விவசாயம் செய்யலாம். அது போல சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளின் அருளைப் பெறலாம்.
* நமது வாழ்வை ஆக்கவழியில் பயன்படுத்தாமல், அழிவு வழியில் பயன்படுத்தினால் ஏற்படும் துன்பத்திற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார். – சொல்கிறார் அமிர்தானந்தமயி