உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எங்கும் நிறைந்தவன் கண்ணன்!

எங்கும் நிறைந்தவன் கண்ணன்!

ஒருமுறை, கதாகாலட்சேபத்தின்போது கண்ணனின் மகிமைகளைக் குறித்து பேசினார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். அப்போது அவர் சொன்ன அற்புதத் தகவல் இது. ஊரெல்லாம் தயிர் விற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள் கோபிகை ஒருத்தி, அவளின் இடையில் காலிப்பானை இருந்தது. வழக்கம்போல ஊர் சுற்றிவிட்டுத் திரும்பும் கண்ணன், கோபிகையைக் கண்டான். அவனுக்குள் ஒரு திட்டம் உதித்தது. அதாவது, கண்ணன் வெளியே சென்று வெகுநேரம் ஆகிவிட்டதால் அவனைத் தேடிக்கொண்டிருந்தாள் அன்னை யசோதை. இப்போது அவளிடம் மாட்டிக்கொண்டால் அடிப்பாள் என்று பயம் கண்ணனுக்கு. ஆகவே, கோபிகையைப் பயன்படுத்தி தப்பிக்க நினைத்தான். ஆகவே, கோபிகையிடம் “உன் காலிப் பானையைக் கீழே வை. நான் உள்ளே மறைந்துகொள்கிறேன்” என்றான்.

“இந்தப் பானைக்குள்ளா... உன்னால் எப்படி முடியும்” என்று கோபிகை கேட்டாலும், கண்ணனின் புன்னகையைக் கண்டமாத்திரத்தில், அவளையுமறியாமல் பானையை இறக்கிவைத்தாள். அது, கண்ணனின் உருவத்தைவிட அளவில் சிறியது. மாயக்கண்ணன் சட்டென்று தன் உருவத்தைச் சிறிதாக்கி உள்ளே மறைந்துகொண்டான். கோபிகைக்கு ஒரே வியப்பு. ஆனாலும் அவளுக்குள் சிறு சந்தேகமும் முளைத்தது. பானைக்குள் கண்ணன் இருக்கிறானா என்று சோதிக்க எண்ணி உள்ளே பார்த்தாள். பானைக்குள் கண்ணன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனது வாய்க்குள்ளே இந்த உலகம்... ஏன் அண்டசராசரங்களுமே தெரிந்தன! ஆம்! எங்கும் நிறைந்தவன் - எல்லாமும் ஆனவன் அல்லவா அந்தக் கண்ணன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !