வடமதுரையில் நல்லகாரியங்கள் செய்த கள்ளியடி சுவாமி
வடமதுரை: வடமதுரை மேற்குரத வீதியில் தங்கி உதவி செய்த ஒரு மனிதரின் நினைவாக அரை நூற்றாண்டுகளாக கூட்டு வழிபாடு நடந்து வருவது யாருக்காவது தெரியுமா...
கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன் இங்கு. மதுரை மாவட்டம் அழகர்கோவிலை அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. 16 வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வடமாநில திருத்தலங்கள் சென்றுவிட்டு வடமதுரை வந்தார். பின்னர் காணப்பாடி புதுப்பட்டி சென்று கள்ளிமரத்தடியில் தங்கியிருந்தார். அப்போது பெய்த மழை அவர் மீது மட்டும் பெய்யாமல் அதிசயிக்க வைத்ததாம்.
இதனால் அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக கருதிய மக்கள் "கள்ளியடி சுவாமிகள் என அன்பால் அழைத்தனர். கிராமத்திற்கு நல்ல காரியங்கள் பல செய்த அவர் 21.1.1941ல் மகாசமாதி அடைந்தார்.
அவருக்கு தற்போது அங்கு கோயில் அமைத்து ஆண்டுதோறும் தை மாத விசாக நட்சத்திர நாளில் குருபூஜை விழாவை திருவிழா போல கிராமத்தினர் நடத்துகின்றனர்.
புதுப்பட்டி மக்களை பின்பற்றி வடமதுரையிலும் தற்போது மாசி விசாக நட்சத்திர நாளில் குருபூஜை விழா பல ஆண்டுகளாக நடக்கிறது. அத்துடன் சிறப்பு அம்சமாக வடமதுரையில் கள்ளியடி சுவாமிகள் தங்கியிருந்த மடத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு 10:00
மணி முதல் 12:00 மணி வரை கூட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஜவுளி வியாபாரி முத்துக் கருப்பன் துவக்கிய இந்த கூட்டு வழிபாடு தற்போது அரை நூற்றாண்டுகளாக நடக்கிறது. இதுகுறித்த விபரங்களுக்கு வழிபாட்டு குழு உறுப்பினர் மருதைவீரனை 9944542556 என்ற
அலைபேசியில் அழைக்கலாம்.