உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2013ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

2013ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் 2013 ல் நடத்தப்படும், என அமைச்சர் ஆனந்தன் கூறினார். ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 1,006 கோயில்களில் திருப்பணிகள் துவக்கப்பட்டு, 620 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மிக பழமையான 94 கோயில்களை புனரமைக்க, மத்திய அரசு ரூ. 22.5 கோடியும், தமிழக அரசு ரூ.3 கோடியும் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், சாக்கடை கழிவுகள் கலப்பதை தவிர்க்க, ரூ. 36 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தற்போது, 468 கோயில்களில் நடந்து வரும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பழனி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம் உட்பட பெரிய கோயில்களில் விரைவில், பேட்டரி கார் வசதியை முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார். ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் புதிதாக தங்கும் விடுதிகள் கட்டப்படும். காலியாக உள்ள பூஜகர் பணியிடங்கள் நிரப்பப்படும். அனைத்து தீர்த்தங்களிலும் டைல்ஸ்கள் பதிக்கப்படும். அன்னதான கூடம் விரிவுபடுத்தப்படும். முதல்வருடன் ஆலோசித்து, 2013 ல் ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார். கலக்குது கமலம் வண்ணம் ஜொலிக்குது ராமேஸ்வரம் கோயில்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம் கமலம் பெயின்டிங்கால் ஜொலிக்கிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் கமலம் பெயின்டிங் பணி நடந்து வருகிறது. ரூ.27 லட்சத்தில் நடந்து வரும் இப்பணியின் முதற் கட்டமாக மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதி முழுவதும் பல வண்ணங்களில் கலைநயம் மிக்க ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. மதுரை செல்வக்குமரன் ஸ்தபதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஓவியர்கள், பெயின்டிங் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியை தொடர்ந்து மேற்கிலுள்ள இணைப்பு பிரகாரம் மற்றும் தெற்கு பகுதியில் பெயின்டிங் பணி நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !