உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க குடங்கள் உள்ளே: பத்மநாபசுவாமி கோவிலில் பரிகார பூஜைகள் ஒத்தி வைப்பு!

தங்க குடங்கள் உள்ளே: பத்மநாபசுவாமி கோவிலில் பரிகார பூஜைகள் ஒத்தி வைப்பு!

திருவனந்தபுரம் : தேவ பிரசன்ன பரிகார பூஜைகளுக்கு பயன்படும் தங்க குடங்களை, பொக்கிஷ அறைகளில் இருந்து எடுக்க முடியாததால், பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டன. கேரளா திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஏதேனும் பூஜைகள் நடக்காமல் உள்ளதா, தவறுகள் நடந்துள்ளதா என்பது போன்றவற்றை அறிய, கடந்தாண்டு தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில், குறிப்பிட்டபடி பல்வேறு பரிகார பூஜைகள் அவ்வப்போது, கோவிலில் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், கோவிலில் கலச பூஜை மற்றும் தங்க சீவேலி நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. இதில், கலச பூஜைக்கு, 160 தங்க குடங்கள் தேவை. இக்கோவிலை பொறுத்தவரையில், தங்க குடங்களை வைத்து தான் கலச பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதற்காக நிறைய தங்க குடங்கள், கோவில் பாதாள அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்கழி மாதம், கோவிலில் சந்தன அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பாதாள அறையில் இருந்து, 200க்கும் மேற்பட்ட தங்க குடங்கள் எடுக்கப்பட்டன. பின்னர், அவைகள் மீண்டும் பாதாள அறையில் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, திருவனந்தபுரம் சார்பு கோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை கோர்ட் ஏற்காமல், உடனடியாக தங்க குடங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க, கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தங்க குடங்கள் மீண்டும் பாதாள அறையில் வைத்து சரிபார்க்கப்பட்டன. இதை அடுத்து, கோர்ட் அட்வகேட் கமிஷனரை நியமித்து, அவரது மேற்பார்வையில் தான் பொக்கிஷங்களை வெளியே எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், நேற்று முன்தினம், நடக்கவிருந்த பரிகார பூஜைக்கு தங்க குடங்களை எடுக்க முடியாமல் போனது. தொடர்ந்து பரிகார பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல், பாதாள அறையில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !