உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20ல் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20ல் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்!

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோயிலில், 31வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 20ம் தேதி துவங்குகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டியக் கலைஞர்கள், தங்களின் நாட்டியக் கலையை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் வகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக அறக்கட்டளை துவக்கி, 1981ம் ஆண்டு முதல், கடந்த 30 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று, அவர்களின் கலாசாரத்தின்படி, பரதம், குச்”ப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா, மணிப்பூரி நடனம் உள்ளிட்ட பல்வேறு வகை நாட்டியங்களை ஆடி வருகின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று துவங்கி, 5 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.துவக்க விழாவில், தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் நடராஜன், விழாவைத் துவக்கி வைக்கிறார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, சென்னை தொலைக்காட்சி இயக்குனர் மேகநாதன் உள்ளிட்ட பலர், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !