காஞ்சிபுரம் கோவிலில் வெளி மாநில பக்தர்கள் அதிகரிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவிலில், வட மாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜப்பெருமாள், காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர் ஆகிய கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.தற்போது சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் திரும்பி வரும்போது, காஞ்சிபுரம் கோவிலில் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அது போல், மேல்மருவத்துார் கோவிலுக்கு செல்லும் அம்மன் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.இந்த பக்தர்கள் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதே போல் காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் வெளி மாநில பக்தர்கள் அதிகம் தென்படுகின்றனர்.இதனால், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி, கண்ட இடத்தில் நிறுத்தி செல்கின்றனர். இதன் காரணமாக ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.அந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.