உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோவில் கருவூலச் சாவிகள்: மீண்டும் ஸ்தலஸ்தாரிடம் ஒப்படைப்பு!

திருச்செந்தூர் கோவில் கருவூலச் சாவிகள்: மீண்டும் ஸ்தலஸ்தாரிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி:சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, திருச்செந்தூர் முருகன் கோவில் நகை கருவூலத்தின் இரு சாவிகள், மீண்டும் ஸ்தலஸ்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இக்கோவிலில், தினசரி பூஜை காலங்களில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள கருவூலத்திற்கான சாவிகளில், இரண்டு கோவில் நிர்வாகத்திடமும், இரண்டு ஸ்தலஸ்தார் சபையினரிடமும், 44 ஆண்டாக இருந்து வந்தன. இந்நிலையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் நகை பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி, ஸ்தலஸ்தார்களிடமிருந்த அந்த இரு சாவிகளை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில் ஸ்தலஸ்தார் சபையினர் செய்த முறையீடு தள்ளுபடியானது. இதன் பின்னும், அவர்கள் சாவிகளை ஒப்படைக்கவில்லை எனக் கூறி, வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில், கடந்தாண்டு பிப்., 11ல் கோவில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ஸ்தலஸ்தார்களின் கருவூலச் சாவிகள் இரண்டு எடுக்கப்பட்டு, கருவூலத்தை திறந்து நகை சரிபார்க்கப்பட்டது. மீண்டும் ஸ்தலஸ்தார்களிடம் ஒப்படைப்பு: இதனிடையே, இப்பிரச்னை தொடர்பாக ஸ்தலஸ்தார் சபையினர், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதுகுறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை கொண்ட ஒரு நபர் கமிட்டியை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதன்பின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. இதனிடையே, அறநிலையத் துறை, ஸ்தலஸ்தார்களிடம் சாவியை தர சம்மதம் தெரிவித்தது. இவ்வழக்கில், அறநிலையத் துறைக்கும், ஸ்தலஸ்தார் சபைக்கும், இம்மாதம் 9ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் உடன்பாடு ஏற்பட்டது. அதனடிப்படையில், இக்கோவில் நகை கருவூலத்தின் இரு சாவிகளை நேற்று, தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர், ஸ்தலஸ்தார் சபை தலைவர் குமார், செயலர் சிதம்பர வாத்தியார், பொருளாளர் தர்மராஜனிடம் மீண்டும் ஒப்படைத்தனர். ஸ்தலஸ்தார் சபையினர், திரி சுதந்திரர்கள் பலர் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். இதன்பின், கருவூல நகை சரிபார்க்கும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !