உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் @நற்று துவங்கிய, 31ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில், பிரபல நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், 31ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, நேற்று மாலை துவங்கியது. குப்புசாமி தீட்சதர் தலைமை தாங்கினார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் நடராஜன் வரவேற்றார். தமிழக தேர்வாணையக் குழு தலைவர் நடராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நாட்டியாஞ்சலியை துவக்கி வைத்தார். பெங்களூரு கிருத்திகா ஜெயக்குமார் பரதத்துடன், முதல் நாள், முதல் நிகழ்ச்சி துவங்கியது. அவரைத் தொடர்ந்து, சேலம் நிருத்ய கலாலயா மாணவியர் பரதம், கோவை அபிராமி நாட்டியாலாயா மாணவியர் நாட்டிய நாடகம், சிதம்பரம் மங்களலட்சுமி-மானச சரஸ்வதி, அண்ணாமலைப் பல்கலை கவின் கலைத் துறை மாணவர்கள், சென்னை அனுஷா வெங்கட்ராமன், பெங்களூரு பிரசாந்த் சாஸ்திரி, சித்ரா அரவிந்த் ஆகியோரின் பரதம், டில்லி ஜெயந்த் கஸ்த்வார் கதக் ஆகியன நடந்தது. அதை தொடர்ந்து, சென்னை ராகவன் நிகழ் கலைகள் மையம் நந்தினி ரமணி இயக்கத்தில் வழங்கும் நாட்டிய சமாராதனம் வர்ணம் நிகழ்ச்சியும், அடுத்து சந்திரசேகரின் சிவ அஷ்டபதியும், திருவனந்தபுரம் நீனா பிரசாத் மற்றும் அவரது மாணவியரின் மோகினி ஆட்டமும், சென்னை நர்த்தகி நடராஜ் தேவாரம், சென்னை சிவகலாயம் மாணவியர் சிவ லீலா நாட்டிய நாடகமும், அதை தொடர்ந்து, மகாராஷ்டிரா அபிநயா நாட்டிய பள்ளி மாணவியர், சென்னை நிருத்ய ஷேத்ரா, சென்னை நர்த்தனாலயா நாட்டியப் பள்ளி, ஸ்ரீரங்கம் பரத கலா அகடமி மாணவியர், அமெரிக்க கலை சந்திரசேகரன், சென்னை பெருமாள் ஆகியோரின் பரதம் நடந்தது.நேற்று மகா சிவராத்திரி தினமாக இருந்ததால், மாலை 5.35க்கு துவங்கிய நாட்டியாஞ்சலி விடிய, விடிய மறுநாள் அதிகாலை, 5 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். ரசிகர்களுக்கு ஏமாற்றம்...சிதம்பரம் நாட்டியாஞ்சலியில், பிரபல சீனியர் கலைஞர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, புது முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி, 1981ம் ஆண்டு துவக்கப்பட்டு, 30 ஆண்டுகளாக பிரபல நாட்டியக் கலைஞர்களான பத்மா சுப்ரமணியன், ஊர்மிளா சத்தியநாராயணன், பார்வதிரவி கண்டசாலா உள்ளிட்டோர் பங்கேற்று, நாட்டியாஞ்சலிக்கு சிறப்பு சேர்த்து வந்தனர். உலகில் எங்கு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலியில் ஆடிய மன நிறைவு கிடைக்காது. இது, எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன் என்று கூறுவர். ஆனால், இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியில் பிரபல கலைஞர்களான சீனியர்கள் பங்கேற்கவில்லை. இது, நாட்டிய ரசிகர்களுக்கு லேசான ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !