பழநியில் பஞ்சாமிர்த பழங்கள் விற்பனை மந்தம்
பழநி: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவால், பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழ விற்பனை மந்தமானது. சபரிமலை சீசன், தைப்பூச விழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு குழுவினராக வரும் ஐயப்ப, முருக பக்தர்கள் வாழைப்பழங்கள் வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பங்கிட்டுக் கொள்வர். கடைகளிலும் பஞ்சாமிர்தம் வாங்குவர். இதனால் பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழங்கள் விற்பனை சக்கைப்போடு போடும். தினமும் டன் கணக்கில் வாழைத்தார்கள் வரத்து இருக்கும்.
இந்நிலையில் சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்ததன் எதிரொலியாக, பழநி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழ விற்பனை பகுதியாக சரிந்தது. வியாபாரி ஆரிஸ்பாபு கூறுகையில், ‘சபரிமலை, தைசப்பூச சீசனில் பழநி நகரில் மட்டும் தினமும் 5 டன் வாழைப்பழங்கள் விற்பனையாகும். சபரிமலை விவகாரத்தால் விற்பனை மந்தமாகி விட்டது. ஒரு நாளைக்கு 2 டன் மட்டுமே விற்கிறது. கடந்த ஆண்டு ஒரு பூவன் பழம் ரூ.4க்கு விற்றது. தற்போது ரூ.2.50 முதல் ரூ.3 ஆக குறைந்திருக்கிறது’ என்றார்.