திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஜன., 17 தெப்பத் திருவிழா நடக்கிறது. இவ்விழா துவங்கும் வகையில் ஜன., 7 மாலையில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
நேற்று காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயக்கர் முன் ரிஷப யாகம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு, தர்ப்பை புல், மா இலை வைத்து பட்டு துணியால் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டது. கம்ப அடிப்பாகத்தில் திரவிய அபிஷேகங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. விழா நடக்கும் ஜன., 17 வரை தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருள்வர். முக்கிய நிகழ்ச்சியாக ஜன., 16 தை கார்த்திகை, அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளுதல் முடிந்து, 16 கால் மண்டபம் முன் உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். ஜன., 17 காலை மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருள தெப்பத் திருவிழா நடக்கும்.