இடிந்த சிவன் கோவில்: அழியாத கல்வெட்டு
ஒரகடம்: உமையாள் பரணஞ்சேரியில், இடிந்து போன சிவன் கோவிலில், பல நுாற்றாண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் கல்வெட்டுகளை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அருகே, வலையகரனை ஊராட்சியில், உமையாள் பரணஞ்சேரி கிராமம் உள்ளது.
இங்கு, வயல்வெளிகளுக்கு இடையே, பழமையான சிவன் கோவில், முற்றிலும் இடிந்த நிலையில் உள்ளது. கோவிலின் கற்துாண்கள், அந்த பகுதியை சுற்றி, ஆங்காங்கே காணப்படுகின்றன. இக்கோவிலில், சிவன், அம்மன் உள்ளிட்ட எந்த சிலைகளும் இல்லை. கோவிலின் அடிப்பகுதி, மண்டபம் மட்டும் காணப்படுகிறது. இதில், சில கல்வெட்டுகளும் உள்ளன. இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:இக்கோவிலில் இருந்த அம்மன் பெயரை வைத்து தான், உமையாள் பரணஞ்சேரி என்றே பெயர் வந்தது. 1,000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். எங்கள் கிராமத்தை சேர்ந்த வயதானவர்களும், அவர்களின் சிறுவயதிலிருந்தே, இந்த கோவில் இடிந்தவாறே இருப்பதாக கூறு கின்றனர். கோவில் இடிந்த நிலையிலும், பல நுாற்றாண்டுகளாக, வரலாற்று தகவல்களை தாங்கி நிற்கும் எஞ்சிய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, கோவிலின் வரலாற்றை கண்டுபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.