பொங்கல் பண்டிகைக்கு பானை, கரும்பு வந்தாச்சு
சோமனுார்:தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரும்பு, மண் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் விற்பனை கருமத்தம்பட்டி,சோமனுார் பகுதியில் சூடுபிடித்துள்ளது.போகியில் துவங்கி, சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என, நான்கு நாட்கள் தொடர்ச்சியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு, கரும்பு, புதுப்பானை, சர்க்கரை, பச்சரிசி, மஞ்சள் மாவிலை, பூளைப்பூ என, பொங்கலுக்கே உரிய சிறப்பு பொருள் விற்பனை கடைகளில் சூடுபிடித்துள்ளது.பண்டிகைக்கு மூன்று நாட்களே இருப்பதால் கருமத்தம்பட்டி, சோமனுார், கணியூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போதே கரும்பு, மண் பானை விற்பனை துவங்கியுள்ளது. மண் பானை, 100ல் இருந்து, 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. நீலாம்பூரில் இருந்து கருமத்தம்பட்டி வரை சாலையோரங்களில் மண் பானை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய்க்கும், சிறிய கரும்பு ஜோடி, 80 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.