உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் வியக்க வைத்த மணிப்பூர் குழு!

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் வியக்க வைத்த மணிப்பூர் குழு!

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் மூன்றாம் நாளான நேற்று, மணிப்பூர் மாநில ஜெயதிசேனா குழுவினரின் மணிப்புரி மற்றும் புங்சோளம் நாட்டியம், ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியை குமாரப்பாளையம் நிருத்ய நடேச கலாலயா மாணவியர் பரதம் ஆடி துவக்கிவைத்தனர். அடுத்து திருச்சி கிருபா ஸ்ரீ வத்சன், பெங்களூரு ஸ்ரீ வித்யா கிருஷ்ணா, பிரபாகினி, சிதம்பரம் சிவசக்தி இசை நடனப்பள்ளி மாணவியர், சிதம்பரம் டாக்டர் சண்முகப்பிரியா ஆகியோர் பரத நாட்டிய நிகழ்ச்சியும், சென்னை உமா ரமேஷின் அப்பர் தேவார நாட்டியமும் நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் மிதிலாலயா அகாடமி மாணவியர் பரதம், டில்லி விஜயலட்சுமி மோகினி ஆட்டம் நடந்தது. மணிப்பூர் ஆர்.கே.ஜெயதிசேனா குழுவினரின் மணிப்புரி மற்றும் புங்சோளம் நாட்டியம் நாட்டிய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மெய்சிலிர்க்க வைத்தது. இலங்கை ஸ்ரீராம் சிருஷ்டி பள்ளி மாணவியர் பரதம், டில்லி ராதிகா சாம்சன் ஒடிசி, சென்னை சரண்யா நிருத்ய வித்யாலயா மாணவியர் மற்றும் கரூர் சுஜாதா மாணவியர் பரதம் நடைபெற்றது. நிறைவாக புதுச்சேரி அபிநயவர்ஷிணி கலை மையத்தினரின் பரதநாட்டியம் நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியில், தங்க சபாபதி தீட்சிதர் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட நீதிபதி உத்ராபதி, வீனஸ் பள்ளி தாளாளர் குமார் ஆகியோர் நாட்டியமாடிய மாணவிகளை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !