திட்டக்குடியில் வசிஷ்ட முனிவர் வாழ்ந்த பகுதியில் சித்தர்கள் ஆய்வு!
திட்டக்குடி: கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பிரம்ம ரிஷி வசிஷ்டமுனிவர், கற்புக்கரசி அருந்ததி வாழ்ந்த தலத்தை பிரம்ம ரிஷி மலை அன்னை சித்தர் உள்ளிட்ட சித்தர்கள் ஆய்வு செய்தனர். புண்ணிய நதிகளில் ஒன்றான யமுனை நதிக்கு ஒப்பான தென் யமுனை என போற்றப்படும் வெள்ளாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி ஆகும். இங்கு வசிஷ்ட முனிவர் வாழ்ந்ததால் திருவதிட்டக்குடி என்றழைக்கப்பட்டது. பிரம்ம தேவனின் மகனான வசிஷ்ட முனிவர் தங்கி தவம் செய்து கற்புக்கரசியான அருந்ததியை மணந்தார். இவரது ஆசிரமத்தில் வளர்ந்து வந்த காமதேனு பசு மேய்ச்சலுக்குச் சென்ற போது சுயம்பு லிங்கத்தின் மீது கால்குளம்பு பட்டு லிங்கத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. ரத்தப்பெருக்கை குறைக்க பால்சுரந்து நின்ற காமதேனு, வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி சுயம்பு லிங்கத்திற்கு கோவில் அமைத்தது.
இந்த சிவலிங்கத்தை வசிஷ்ட முனிவர் பூஜித்து வந்த போது ராமபிரானின் முன்னோர் மனுசக்கரவர்த்தி சூரிய வம்சத்துக்கு குலகுருவாக இருக்க வேண்டியதை வசிஷ்ட முனிவர் ஏற்றார். வசிஷ்ட முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க வேங்கை வனத்தை அழித்து திருவதிட்டக்குடி என்ற ஊரை நிர்மானித்தனர். வேதங்கள் மற்றும் வித்தைகள் கற்க பலர் வந்து சென்றதால் வித்யாரண்யபுரம் எனப் பெயர் பெற்றது. அசனாம்பிகை அருளாசி பெற்று மனுசக்கரவர்த்தியார் எழுதிய மனுநீதி நூல் தோன்றிய புகழ்வாய்ந்தது. வசிஷ்ட முனிவர் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றது இங்குதான். பகவத்கீதைக்கும் மேல் ஞானத்தை அளிக்கக்கூடிய ஞான வசிட்டம் என்ற நூலை இயற்றி ராமபிரானுக்கு உபதேசித்தார். ஜீவான்மாவும், பரமான்மாவும் ஒன்றுபடும் சைதன்ய திருத்தலம், கைலாசபுரிக்கு இணையான ஊர், சுவர்க்க லோகத்திற்கு வாசற்படி இவ்வூர். மூர்த்தி, தீர்தம், தலம் என மூன்று சிறப்புகள் அமையப்பெற்ற உயரிய திருத்தலமாக உள்ளது. தட்சனின் யாகத்தில் எழுந்த பாவங்களைப் போக்க சப்தரிஷிகள் சுவேதநதி என்றழைக்கப்படும் வெள்ளாற்றின் ஏழு துறைகளில் நீராடினர். பிரம்மதேவன் தன் மகனாகிய வசிட்டருக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஸ்தலம். இந்த ஆலயத்தின் கிழக்குபுறத்தில் 100 மீட்டர் தொலைவில் உள்ள திருக்குளத்தில் ராமதீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சத்ருக்கன் தீர்த்தம், குகன் தீர்த்தம், பசு தீர்த்தம் உள்ளிட்ட 24 வகை தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் பெருமையறிந்த பிரம்மரிஷி மலை அன்னை சித்தர், சிங்கப்பூர் சித்தர் நடராஜா பாபா , திரைப்பட இயக்குனர் யார் கண்ணன், குரோஷியா நாட்டைச் சேர்ந்த துறவிகள் ஸிபிள்ட், சுபான் உள்ளிட்டோர் திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி @காவிலை பார்வையிட்டு தல வரலாறுகளை கேட்டறிந்தனர். ஆலயத்தில் இருந்த சிலைகள், ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து பிரம்மரிஷி மலையைச் சேர்ந்த அன்னை சித்தர் கூறுகையில், "சிதம்பரம் தரிசித்த பெருமையும், திருவாரூரில் பிறந்த பலனும், கங்கை காசியில் இறந்த புண்ணியமும் திட்டக்குடியில் வந்து வசிஷ்டம் என வணங்கினாலே கிடைக்கும் எனும் அளவில் புகழ்பெற்ற திருத்தலத்தின் ஆலயம் இன்று சிதிலமடைந்துள்ளது. குளம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனது. இவற்றை சீரமைத்து திருப்பணி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் கூறுகையில், "மலேஷியாவில் நடந்த சித்தர் மாநாட்டில் கோரக்க சித்தர் பற்றி தொடர் எடுத்ததற்காக கவுரவிக்கப்பட்டேன். தொடர்ந்து பிரம்ம ரிஷி என்றழைக்கப்பட்ட வசிஷ்டரும், கற்புக்கரசி அருந்ததியும் வாழ்ந்த இந்த திருத்தலத்தின் பெருமையை உலகம் முழுவதும் சென்றடையும் அளவில் தொடர் தயாரிக்க திட்டம் உள்ளது. அதற்காக தலம் குறித்தும், வசிஷ்டர், அருந்ததி குறித்தும் தகவல்கள் சேகரித்து வருகிறோம். வரும் ஜூலையில் மலேஷியாவில் நடக்க உள்ள ஐந்தாவது உலக சித்தர் நெறி மாநாட்டில் வசிஷ்டர் குறித்த தகவல்கள் வழங்க உள்ளேன் என்றார்.