காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா 29ல் துவக்கம்
காரமடை : காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, வரும் 29ம் தேதி துவங்குகிறது; மார்ச் 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி கொடியேற்றமும், மாலையில் அன்ன வாகன உற்சவமும், 2ம் தேதி சிம்ம வாகனம், 3ம் தேதி அனுமந்த வாகன உற்சவமும் நடக்கின்றன. 4ம் தேதி கருடசேவையும், 5ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 6ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், 7ம் தேதி காலை, தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை 5.30 மணிக்கு தேரோட்டம், நடைபெற உள்ளது. 8ம் தேதி பரிவேட்டையும், 9ம் தேதி தெப்பத்திருவிழாவும், 10ம் தேதி சந்தான சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 11ம் தேதி விழா நிறைவடைகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் மராமத்து பணிகளை செய்து, அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தக்கார் ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.