வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்..
மதுரை: சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் மற்றும் உப கிரகமான சந்திரன் ஆகியவை நேற்று இரவில் வானில் ஒரே நேர்கோட்டில் தெரிந்தன. இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜோதிடர்கள் கூறியதாவது.தற்போது சந்திரனும், சுக்கிரனும் மீனராசியிலும், குரு மேஷ ராசியிலும் உள்ளன. தற்போது மீனராசிக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. இவர்களுக்கு ஏற்படவிருந்த விரயச்செலவு சுபச்செலவாக மாறும். இந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்ததால், அஷ்டமத்து சனியின் தாக்கம் சில நாட்களுக்கு ஓரளவு குறையும். கன்னிராசியினருக்கு ஏழரைச் சனி காலம் என்றாலும் அதியோகம் பெற்று, செல்வவிருத்தி, குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். கன்னி லக்னத்திற்கும் இதே பலன்கள் கிடைக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் இணையும் நிலையை அடைவர். குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றாலும் கற்பனைத் திறனுள்ள புத்திசாலி பிள்ளைகள் பிறப்பார்கள். கும்பராசிக்கும் நல்லநேரம். ஆன்மிகம், தத்துவத்துறையில் உள்ளவர்கள், சந்நியாசிகளுக்கு நல்லநேரம். காவல்துறையினர் சிறப்படைவார்கள். மீன்பிடிதொழிலாளர்களுக்கு உரிய பிரச்னைகள் தீர்வதற்குரிய காலகட்டம். மொத்தத்தில் இந்தச் சேர்க்கை நாட்டிற்கும் நல்ல சகுனமே. மேலும், நேற்று வளர்பிறை உத்திரட்டாதி, திரிதியை திதி என்பது பிளஸ் பாயின்ட். இது வளர்ச்சியைக் குறிக்கும். சுக்கிரனும் குருவும் நேர் கோட்டில் வந்ததால் சில இடங்களில் சுனாமி, பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு.இன்னும் இரண்டு நாட்களுக்குள், நவக்கிரக மண்டபத்தில் சந்திரன், சுக்கிரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தியும், குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தியும் பூஜை செய்து கொண்டால் நன்மை அதிகரிக்கும் என்றனர்.