உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம் அடிப்படை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம் அடிப்படை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உத்ஸவத்திற்கு பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.

இந்த உத்ஸவம் பதினொரு நாட்கள் நடக்கும் கடைசி நான்கு நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல ஆயிரம் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர். தெப்பத்தன்று பரவலாக அன்னதானம் நடக்கும். ஆனால் பெயரளவிலேயே குடிநீர் வசதி அமைக்கப் படுகிறது. பக்தர்களுக்கு ஏற்ப போதிய அளவில் குடிநீர் வசதி இருப்பதில்லை. மேலும் கழிப்பறைகளில் தண்ணீர் இருப்பதில்லை என்று புகார் தொடர்கிறது.

மேலும் சுற்றிலுமுள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு எங்குமே நிற்க நிழற்கூரை இல்லை. பகல் தெப்பமும் நடப்பதால் குடிநீர் தேவை அதிகரிக்கிறது.கடந்த ஆண்டு கோயில் சிறப்பு தரிசனத்திற்கான வழி சிவகங்கை ரோட்டில் கோயில் மதிர்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டது. பொது தரிசனம் என்று பலரும் அதில் சென்றனர். இதைத் தவிர்க்க கோயில் குளம் அருகே செல்லும் வழியை கட்டண தரிசனமாக மாற்றி, பக்தர்களுக்கு எளிதாக தெரியும் கோயில் முன்புறம் வரும் வரிசையை பொது தரிசன வழியாக மாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு 9 ம் நாள் விழாவில் எதிர்பாராமல் கூடிய கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தவிர்க்க சரியான முறையில் போக்குவரத்தை கையாள வேண்டும். தானிப்பட்டியிலிருந்து தெப்பக் குளம் வரை போக்குவரத்து போலீசார் அரண் அமைத்து இரு வழி போக்குவரத்தை கடை பிடிக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தாத இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்கலாம். பிப்.,10 ல் விழா துவங்க உள்ள நிலையில் உடனடியாக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டதம் நடத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !