உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொக்காபுரம் தேர் திருவிழாவில் பக்தர்கள் பரவசம்: உப்பு மழையில் நேர்த்தி கடன்!

பொக்காபுரம் தேர் திருவிழாவில் பக்தர்கள் பரவசம்: உப்பு மழையில் நேர்த்தி கடன்!

ஊட்டி : பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரத்தில், உள்ள பொக்கா அம்மனை மசினகுடி, மாயார், சிறியூர், ஆணைகட்டி, சொக்கநல்லி, சோலூர் போன்ற கிராம மக்கள் குலதெய்வமாகவும், லங்கூர் இனத்தை சேர்ந்த முல்லை குரும்பர் மக்கள் அம்மனுக்கு கோவில் கட்டியும் வழிபட்டு வருகின்றனர். மாறுபட்ட 3 மூலஸ்தானங்கள் மற்றும் 3 தல விருட்சங்கள் உள்ள பொக்காபுரம் கோவில் மூலஸ்தானத்தில் மாரியம்மனு டன் மசினியம்மன், சிக்கம்மன், கரியபெட்டன் ஐயன் ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் இங்கு தேரோட்டம் நடக்கிறது. இந்த நேரத்தில் பொக்கா அம்மன், மசினி அம்மன், சிக்கம்மன், சீரியம்மன், ஆனைக்கல் அம்மன், கொக்கரல்லி அம்மன், தண்டுமாரியம்மன் ஆகியோர் ஒரு சேர வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது ஐதீகமாக உள்ளது. ஆண்டுதோறும் இந்து அறநிலைய துறையினர், ஆதிவாசியினர் மற்றும் படுகரின மக்கள் இணைந்து திருவிழாவை சிறப்பாக நடந்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழாவை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி இரவு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம், 26ம் தேதி கங்கை பூஜை, கரக உற்சவம் நடந்தது. திருவிழா தினமான நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் அம்மன் திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன், ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன், இந்து அறநிலைத்துறை இணை ஆணையார் புழகேந்திரன், கோவில் செயல் அலுவலர் நாகராஜ், அறங்காவலர் குழு தலைவர் மூர்த்தி மற்றும் அறங்காவலர்கள் துவக்கி வைத்தனர். தேரோட்டத்தின் போது, ஆதிவாசிகள் மற்றும் படுகர் இன மக்கள் பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடி பக்தி பரவசத்துடன் வருகை தந்தனர். தேர் புறப்பட்ட போது உப்பு"மழை பொழிந்தது. கோவில் பிரகாரத்தை ஒரு முறை தேர் சுற்றி வந்தது. நேற்று காலை 10.00 மணிக்கு மாவிளக்கு பூஜை மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தொட்டில் கட்டுதல், கரகம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் ஆகியவற்றால் தங்களது வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி கொண்டனர். மற்ற கோவில்களை போன்று அர்ச்சனை, கால பூஜை, மந்திர உச்சாடனை இல்லாமல் பக்தர்கள் விருப்பம் போல் பூஜைகள் செய்யப்படுவது சிறப்பு அம்சமாக இருந்தது. கடந்த மூன்று நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட் டுள்ளனர். விழாவையொட்டி ஊட்டி, கூடலூர், குன்னூர், மசின குடி மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !