தலைவாசலில் மகேஷ்வராஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை
தலைவாசல்: மகேஷ்வராஷ்டமியையொட்டி, பைரவர் கோவில்களில், நேற்று (பிப்., 26ல்), சிறப்பு பூஜை நடந்தது.
தை மாத தேய்பிறை அஷ்டமி, மகேஷ்வராஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலிலுள்ள, அஷ்ட பைரவர் ஆலயத்தில், காலை, பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப் பூவை வைத்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின், எட்டு பைரவர் களுக்கும், தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வெள்ளி கவசம்: ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், உலக நன்மை வேண்டி, யாக குண்டத்தில், வற்றல் மிளகாய், மூலிகைகள் கொட்டி, பிரித்தியங்கிரா தேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, பூஜை நடந்தது. மதியம், அம்மன், பைரவர் வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
சிறப்பு யாகம்: வாழப்பாடி, தான்தோன்றீஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, காலபைரவருக்கு ஆராதனை, பூஜை நடந்தது. அதேபோல், வாழப்பாடி, அக்ர ஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம், பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் கோவில்களில், காலபைரவருக்கு பூஜை நடந்தது.
மாலைகளால்...: சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், திருநீறு, செவ்வரளிப்பூ, எலுமிச்சம் பழ மாலைகளால், பைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.