பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் சிவராத்திரி விழா உற்சவத்தில், நந்தி உளளிட்ட வாகனங்களில், உற்சவர் அருள்பாலிக்கிறார்.
ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில், பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சிறப்பானதான, 10 நாட்கள் நடைபெறும் சிவராத்திரி விழா, பிப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்றைய தினம் காலை, 9:00 மணிக்கு, பஞ்சமூர்த்தி அபிஷேகம், யாக சாலை பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் பல்லக்கு வாகனத்தில், கோவிலை சுற்றி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சந்திரபிரபை, காமதேனு, பூத, அதிகாரநந்தி உள்ளிட்ட வாகனங்களில், தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது.இன்று, 2ம் தேதி, கஜ வாகனத்திலும், நாளை, அஸ்வ வாகனத்திலும் வலம் வருகிறார். விழாவின் முக்கிய நாளான, 4ம் தேதி மாலை, 4:00 மணி முதல் மறுநாள் விடியற்காலை, 4:00 மணி வரை, நான்கு கால அபிஷேகம் நடைபெறும்.அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, கல்யாண உற்சவம் நடைபெறும். 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், கல்பவிருட்சம், த்வஜா அவரோஹனம் வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.