மணப்பள்ளி முனியப்பன் ஸ்வாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
மோகனூர்: மோகனூர் அடுத்த மணப்பள்ளி முனியப்பன் கோவில் திருப்பணி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை (மார்ச் 4) கோவில் கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, இன்று (மார்ச் 3) காலை 6 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரகம், மகாலட்சமி ஹோமம் நடக்கிறது.அதையடுத்து, காலை 9 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் எடுத்துக்கு கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைகின்றனர். அன்று மாலை 5 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ஸ்வாமிக்கு காப்புக்கட்டி கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (மார்ச் 4) அதிகாலை 4 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தனம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடும் நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு ராஜகணபதி, சொங்கலம்மன், நவக்கிரகங்கள், புக்கராண்டி ஆகிய ஸ்வாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு விநாயகர் தோரண வாயில், முனியப்ப ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாலகமாக நடக்கிறது. தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்று இரவு 7 மணிக்கு முனியப்ப ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.