மேட்டுப்பாளையம் அம்சி காளியம்மன் கோவிலில் ஆண்டு விழா: 108 சங்கு பூஜை
மேட்டுப்பாளையம்:காரமடை அருகேவுள்ள அம்சி காளியம்மன் கோவிலில் ஆண்டு விழாவும், 108 சங்கு பூஜைகள் நடந்தன.காரமடையை அடுத்த சிறுமுகை ரோட்டில் மிகவும் பழமையான அம்சி காளியம்மன் கோவில் சிதிலம் அடைந்திருந்தது.
கடந்தாண்டு டிரஸ்ட் அமைத்து திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு ஆனதை அடுத்து ஆண்டு விழாவும், அம்சி காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.பவானிசாகர் கோட்டை கோவில் சோமசேகர குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள், 108 சங்கு பூஜை, கலச பூஜை, காயத்திரி ஹோமம் ஆகியவை நடந்தன. 108 சங்குகளில் இருந்த தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் டிரஸ்ட் தலைவர் விஜயன், துணைத்தலைவர் ராஜ்குமார், பொருளாளர் முத்துசாமி, செயலாளர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.