உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி, திருப்பத்தூரில் சித்திரை பால்குடம்

சிங்கம்புணரி, திருப்பத்தூரில் சித்திரை பால்குடம்

திருப்புத்தூர்: திருத்தளி நாதர் கோயிலில் முருகனுக்கு பக்தர்கள் சித்திரை பால்குடம் எடுத்தனர். குன்றக்குடி ஆதினம் ஐந்து கோயில் தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளி நாதர் கோயிலில் வடக்கு நோக்கி முருகன் எழுந்தருளியுள்ளார்.
சித்திரை பால்குட விழாவை முன்னிட்டு ஏப். 9ல் முருக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர்.நேற்று (ஏப்., 14ல்) சித்திரைப் பிறப்பை முன்னிட்டு காலை எல்கை தெய்வமான கோட்டைக் கருப்பண்ண சுவாமி கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக திருத்தளிநாதர் கோயில் வந்தனர். தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.

என். வைரவன்பட்டி: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவர் கோயிலில் சித்திரைப்பிறப்பை முன்னிட்டு சித்திரைக் கனி விழா நடந்தது. சித்திரை மாதத்தின் முதல் நாளில் இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக இருக்கும். அத்தருணத்தில் சித்திரைக்கனியை கோயிலில் காண்பதால் அந்த வருடம் முழுவதும் நம் வாழ்வில் ஐஸ்வர்யம் நல்கும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு நேற்று(ஏப்., 14ல்) கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து மார்த்தாண்ட பைரவர் சன்னதியில் மூலவருக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டு அதில் தெரியும் பைரவருக்கு முன் 50 க்கும் மேற்பட்ட பழங்கள் வைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்ஸவ பைரவர் பிரகார வலம் வந்தார். மாலையில் விஹாரி
தமிழ் வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

ஏற்பாட்டினை சி.டி. எஸ்.சிதம்பரம், எஸ்.எல்.எஸ். பழனியப்பன், ஏ.எல்.எம். லெட்சுமணன் மற்றும் வைரவன் கோயில் நகரத்தார் சங்கத்தினர் செய்தனர்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று (ஏப்., 14ல்) பால்குட விழா நடந்தது.

ஓம் சேவுகா ஐயப்பா யாத்திரை குழு மற்றும் கிராமத்தார்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராம. அருணகிரி தலைமை வகித்தார். ஐயப்ப குருசாமிகள் முன்னிலை வகித்தனர்.

சந்திவீரன் கூடத்திலிருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் பெரியகடைவீதி, காரைக்குடி சாலை வழியாக சேவுகப்பெருமாள் அய்யனார். கோயிலை அடைந்தது. அங்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பூரணை புட்கலை சமேத சேவுகப்பெருமாள் அய்யனார் காட்சி அளித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !