மீனாட்சி ஆட்சி துவங்கியது: விழாக்கோலம் பூண்டது மதுரை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிககு சபாநாயகர் புறப்பாடாகி ஊடல் லீலை நடந்தது. மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம் சாற்றி நேற்று இரவு 8:00 மணிக்கு ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கப்பட்டது. ஸ்தானிக பட்டர் முன்னிலையில் காப்புக்கட்டிய சுவாமிநாதன் பட்டர் பூஜைகள் செய்தார். செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு 8:15 மணிக்கு மீனாட்சி அம்மனிடம் இருந்து சிவாச்சாரியார்கள் செங்கோல் பெற்று, தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கினர். செங்கோலுடன் தக்கார் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோல் சமர்ப்பித்தார். மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் முடிந்ததையடுத்து பட்டத்து ராணியான மீனாட்சி அம்மன் மதுரையை நேற்று முதல் ஆறு மாதம் ஆட்சி செய்வார் என்பது ஐதீகம். மீனாட்சியம்மன், தடாதகை பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் அம்மனின் திக்கு விஜயம் இன்று (ஏப்.,16) இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. அப்பொழுது அம்மன் அஷ்ட திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடக்கிறது.