உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயிலில் அதிகாலை யில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.  சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பழநி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

படிப்பாதையில் திருமுருகபக்த சபா சார்பில், காலையில் படிபூஜை நடந்தது. பக்தர்கள் பால் குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.

மலையில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் யாகபூஜை, வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது. வெளிப்பிராகாரத்தில் 30 அடி உயரத்தில் சந்தனத்தால் ஓம், வேல் வரைந்து, தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பொதுதரிசனம் வழியில் வெளிப்பிரகாரம் நின்றிருந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். இரவு தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, பழநி திருவள்ளுவர் சாலையில் உள்ள
சாய்பாபா கோயிலில் பழங்கள், காய்கறிகளால் சாய்பாபாவிற்கு அலங்காரம் செய்திருந்தனர். திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர், லட்சுமிநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில்
பக்தர்கள் வழிபட்டனர்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தன.

* குழந்தை வேலப்பர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய பூஜைகள் நடந்தன.

* பெரியநாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சுருளி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

* தாண்டிக்குடி அருகே உள்ள கதவுமலை சிவன்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாச்சலூர் பகுதியிலிருந்து பக்தர்கள் நடைபயணமாக வந்தனர்.

* கானல்காடு பூதநாச்சியம்மன், பண்ணைக்காடு சுப்பிரமணியசுவாமி, கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர் குழந்தை கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு, திருமஞ்சன அபிஷேகம்  செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்ய பட்டிருந்தது.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு ராஜ அலங்காரமும், உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்துடனும் பூஜைகள்
நடந்தது.

* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், பழ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !