வீரபாண்டி சித்திரை திருவிழா கொடியேற்றம்
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சித்திரை திருவிழா முகூர்த்த கம்பம், கடந்த, 4ல் நடப்பட்டது. நேற்று (ஏப்., 17ல்) காலை, கரபுரநாதர், பெரியநாயகி அம்மன், கொடி மரத்துக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் மாலைகளால் அலங்கரித்து, சிவாச்சாரி யார்கள், கம்பத்தில் கொடியை ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர்.
மாலை, பிரதோஷ விழாவில், பெரியநாயகி சமேத கரபுரநாதர், காளை வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, பக்தர்கள் கரபுரநாதரை தோளில் சுமந்து, சிவ, சிவ கோஷம் முழங்க, கோவிலை வலம் வந்தனர்.
இன்று (ஏப்., 18ல்) மாலை, பெரியநாயகி, கரபுரநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை, தேரோட்டம் நடக்கும். ஏப்., 21 இரவு சப்தாவரணம், 22 மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், திருவிழா நிறைவடையும்.
சித்ரா பவுர்ணமி விழா இன்று (ஏப்., 18ல்) தொடக்கம்: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், சத்குரு ஞானந்தகிரி சுவாமிகள் ஆசிரமத்தில், 85ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, இன்று (ஏப்., 18ல்) மாலை, 3:00 மணிக்கு, பஜனை பாடல்களுடன் தொடங்கும். ஆசிரம தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகிப்பார். இரவு, 7:00 மணிக்கு, ஞானந்தகிரி சுவாமிகள், பாதுகைக்கு அபிஷேக ஆராதனை, திருவாசகம் பாராயணத்துடன் சித்ரா பவுர்ணமி விழா நடக்கும்.
நாளை (ஏப்., 19ல்) காலை, சாதுக்கள் தலைமையில் மகேஸ்வர பூஜை, மதியம் அன்னதானம், இரவு, சிறப்பு சொற்பொழிவு, இன்றைய சூழலில் நமக்கு வழிகாட்டியாக இருப்பது கம்ப ராமாயணமா, மகாபாரதமா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும். ஏப்., 20 மாலை, 6:00 மணிக்கு, உலக சமுதாய சேவா சங்க திருச்சி பேராசிரியை அமுதா ராமானுஜம், சொல் எனும் மந்திரம் தலைப்பில் பேசவுள்ளார்.