உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊர் கூடி தேர் இழுத்தது அன்று: நுாறு பேர் கூடி தேர் இழுக்குது இன்று

ஊர் கூடி தேர் இழுத்தது அன்று: நுாறு பேர் கூடி தேர் இழுக்குது இன்று

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. தேரின் வடம் பிடித்து இழுக்க போலீசார் வாய்ப்பு வழங்காமல் கெடுபிடி காட்டியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


ஹிந்து கோயில்களின் விழாக்களில் முத்தாய்ப்பு நிகழ்வாக தேரோட்டம் நடத்துவதே ஒற்றுமையை வலியுறுத்தவும், மத நல்லிணக்கம் மேம்படவும் தான். இதற்காக அன்று ஊர் கூடி தேர் இழுத்தனர். ஒரு தெரு வழியாக தேரின் வடங்களை பிடித்து அனைவரும் இழுத்து செல்வர். அனைவரும் வடம் பிடிக்க வேண்டும், என்பதற்காக அடுத்த தெரு வழியாக தேர் வந்ததும், அந்த தெருவில் வசிப்பவர்கள் வடம் பிடித்து இழுக்க வாய்ப்பு தரப்படும். வடம் பிடிக்க இயலாத வயதானோர் தேரின் வடத்தை தொட்டு வணங்கி, வடத்தின் தடம் பதிந்த இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர்.


தற்போது பாதுகாப்பு எனக்கூறி தேர்களையும், தேரோட்டப் பாதைகளையும் போலீசார் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்கின்றனர். தேர்களை முதல் முறையாக வடம் பிடித்து இழுப்பவர்களே இறுதி வரை இழுக்க வேண்டும், என்பது எழுதப்படாத விதி. தடம் பிடிக்க விரும்புவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் போலீசார் விரட்டியடிக்கின்றனர். நேற்று நடந்த மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டத்தில், பல மணி நேரம் வடம் பிடித்து இழுத்து வந்தவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் சோர்வடைந்தனர். ‘சுவாமி தேர் நிலையை அடைந்து விட்டது. அம்மன் தேர் நிலையை அடைய ஒத்துழைப்பு கொடுத்து உடனே வடத்தை பிடித்து இழுங்கள்,’ என ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது. எனினும், கடுமையான சோர்வால் வடங்களை கீழே போட்டு இளைப்பாறினர். வடம் பிடிப்பவர்களுக்கு ஓய்வு அளிக்காமலும், வடம் பிடிக்க பிறருக்கு வாய்ப்பு வழங்காமலும் போலீசார் கண்டிப்பு காட்டியது பக்தர்களை வேதனையடைய செய்தது. விரும்பும் அனைவரும் வடம் பிடிக்க கோயில் நிர்வாகம், போலீசார் வாய்ப்பு வழங்கலாமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !