வீரபாண்டி அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
வீரபாண்டி: அண்ணமார்சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை காண, ஆயிரக்கணக்கான பக்தர் கள் குடும்பத்துடன் குவிந்தனர். சேலம், கல்பாரப்பட்டியில் உள்ள பழமையான அண்ணமார் சுவாமி கோவிலில் புதிதாக யானை, குதிரை, சேனை ஆகியவைகளை அமைத்து, மராமத்து செய்து புதுப்பித்து கோவில் கட்டியுள்ளனர். இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) துவங்கியது. நேற்று (ஏப்., 22ல்) காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜை பூர்ணா ஹூதியுடன் நிறைவு பெற்று, பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் நிரம்பிய கலசங்களை, சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து, மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்தனர். 10:00 மணிக்கு வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளியுள்ள அண்ணமார் சுவாமி சிலைகளுக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
விழாவை காண சேலம், இளம்பிள்ளை, அரியானூர், சீரகாபாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்திருந்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கல்பாரப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.