ஆதிசங்கரர் ஜெயந்தி விழா மே 7ல் கோவையில் துவக்கம்
கோவை:கோவை ஆதிசங்கரர் பக்தர்கள் சார்பில், ஆதிசங்கர ஜெயந்தி விழா, கோவை ராம்நகர் ராமர் கோவிலில், மே 7ம் தேதி துவங்குகிறது.கேரள மாநிலம், காலடி எனும் கிராமத்தில் அவதரித்தவர் ஆதி சங்கரர். இளம் வயதில் சன்னியாசம் பெற்ற அவர், அனைத்து உயிர்களிலும் இருக்கும், பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர்.நாடு முழுவதும் பாத யாத்திரையாகவே சென்று, துவாரகா, சிருங்கேரி, கேதார்நாத் உட்பட பல்வேறு இடங்களில் மடங்கள் நிறுவி, 32வது வயதில் மகாசமாதியடைந்தார்.
அவர் இயற்றிய பஜ கோவிந்தம் உட்பட ஸ்லோகங்கள், இன்றும் பிரபலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.கடவுள் நம்மிடம் தான் இருக்கிறார் எனக்கூறும் ஆதி சங்கரரை கொண்டாடும் விதமாக, கோவை ஆதி சங்கரர் பக்தர்கள் சார்பில், ஸ்ரீ சங்கர ஜெயந்தி உத்சவம், ராம்நகர், ஸ்ரீ ராமர் கோவிலில், மே 7, 8, 9ம் தேதிகளில் நடக்கிறது.மே, 7, 8ம் தேதிகளில், மாலை, 6:30க்கு, தஞ்சை பாபநாசத்தை சேர்ந்த லலிதா வெங்கடேசனின், சங்கர விஜயம் சொற்பொழிவு நடக்கிறது. சங்கர ஜெயந்தியான மே, 9ம் தேதி காலை, 7:30 முதல், 11:30 மணி வரை, ஆவஹந்தி ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மாலை, 6:30க்கு, ஆதிசங்கரரின் விக்ரகமும், உருவப்படமும், சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு, 30 வேதவிற்பன்னர்கள், ருத்ரம் முதலான வேதபாராயணம் மற்றும் நாமசங்கீர்த்தனம் செய்தபடி ஊர்வலம் நடக்கிறது.
பள்ளி மாணவர்கள் ஆதிசங்கரர் வேடமணிந்து பங்கேற்கும் திருவீதி உலா, ராமர் கோவிலில் துவங்கி, ராமர் கோவில் வீதி, தேசபந்து வீதி, ராமர் கோவில் சன்னிதி வீதி, செங்குப்தா வீதி, ராஜாஜி ரோடு, சத்தியமூர்த்தி சாலை வழியாக மீண்டும் கோவிலை அடைகிறது.விபரங்களுக்கு, 94422 12348.