உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூர் 12 ஆண்டுக்கு ஒரு முறை வீரக்காரன் கோவில் விழா

மோகனூர் 12 ஆண்டுக்கு ஒரு முறை வீரக்காரன் கோவில் விழா

மோகனூர்: வீரக்காரன் கோவிலில் நடந்த, மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியில், 63 சுவாமி மாடுகள் கலந்து கொண்டன.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி ஊராட்சி, மேலப்பட்டியில், பிரசித்தி பெற்ற வீரகாரன் கோவில் உள்ளது.

இந்த ஆண்டு விழா கடந்த, 14ல், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 27ல்)இரவு, சுவாமி அழைப்பு ஊர்வலம், எண்ணெய் காப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், வாணவேடிக்கை நடந்தது. நேற்று (ஏப்., 28ல்)அதிகாலை, 2:00 மணிக்கு, செங்கரும்பு பந்தல் அமைத்து, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. 11:00 மணிக்கு பச்சை மூங்கில் தோரணம் நடுதல், மாலை, 3:00 மணிக்கு சுவாமி மாடு அழைத்தல், பட்டியில் அலங்கார பூஜை நடந்தது. 4:00 மணிக்கு, சுவாமி மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. அதில், நாமக்கல், சேலம், திருச்சி, கருர் மாவட்டங்களில் இருந்து, 63 சுவாமி மாடுகள் பூ தாண்டியது.

கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில், 500 மீ., தூரத்தில் இருந்து, மூன்று முறை விடப்பட்டது. அதில் மூன்றாவது முறையாக, முதலில் வந்த எஸ்.வாழவந்தி மேலப்பட்டி சுவாமி மாடு வெற்றி பெற்றது. அதையடுத்து, அந்த கிராமத்தை சேர்ந்த பட்டக்காரருக்கு மரியாதை செய்து, குதிரையில் அழைத்து வரப்பட்டார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பட்டக்காரர்கள், ஊர் பொதுமக்கள், குடிப்பாட்டுகாரர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !