கோவையில் சங்கர ஜெயந்தி உத்சவம்
கோவை : ஆதி சங்கரர் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உத்சவம் நிகழ்ச்சி கோவை ராம்நகர் ராமர் கோவிலில் வரும், 7ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.கேரள மாநிலம் காலடி கிராமத்தில் அவதரித்த ஆதி சங்கரர், இளம் வயதிலேயே சன்னியாசம் பெற்று இந்து சமயத்துக்கு சோதனைகள் வந்த காலகட்டத்தில் சனாதன தர்மத்தை நிலைநாட்டினார்.
பாத யாத்திரையாகவே சென்று துவாரகா, சிருங்கேரி, கேதார்நாத் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மடங்கள் நிறுவினார்.தனது, 32வது வயதில் மகாசமாதியடைந்த ஆதி சங்கரரை கொண்டாடும் விதமாக, கோவை ஆதி சங்கரர் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உத்சவம் மூன்று நாட்கள் நடக்கிறது. உத்சவத்தின் துவக்கமாக, வரும், 7, 8ம் தேதிகளில் மாலை, 6:30 மணிக்கு தஞ்சை பாபநாசத்தை சேர்ந்த லலிதா வெங்கடேசனின் சங்கர விஜயம் சொற்பொழிவுநிகழ்ச்சி கோவை ராம்நகர் ராமர் கோவிலில் இடம்பெறுகிறது.வரும், 9ம் தேதி சங்கர ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராம்நகர் ராமர் கோவிலில், காலை, 7:30 முதல், 11:30 மணி வரை ஆவஹந்தி ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயண நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.மாலை, 6:30 மணிக்கு ஆதி சங்கரரின் விக்ரகமும், உருவப்படமும் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு, 30 வேதவிற்பன்னர்கள் ருத்ரம் முதலான வேதபாராயணம் மற்றும் நாமசங்கீர்த்தனம் செய்தபடிஊர்வலம் நடக்கிறது.பள்ளி மாணவர்கள் ஆதி சங்கரர் வேடமணிந்து கலந்துகொள்ளும் திருவீதி உலாவானது, ராமர் கோவிலில் துவங்கி, ராமர் கோவில் வீதி, தேசபந்து வீதி, ராமர் கோவில் சன்னிதி வீதி, செங்குப்தா வீதி, ராஜாஜி ரோடு, சத்தியமூர்த்தி ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைகிறது.இவ்விழா குறித்த தகவலை, 94422 12348 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.