காஞ்சிபுரம் வைகாசி பிரம்மோற்சவ விழா: அனந்தசரஸ் குளம் தூய்மைப்படுத்த ஏற்பாடு
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து, அத்தி வரதர் வெளியில் எடுக்கும் வைபவம், ஜூலை, 1ல் நடைபெறுகிறது. இதற்காக, பிரம்மோற்சவ தீர்த்தவாரி முடிந்த பின், குளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் உள்ள அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுப்பர். இந்த வைபவம், 48 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு, ஜூலை, 1ம் தேதி, குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் அத்தி வரதர், வசந்த மண்டபத்தில் வைக்கப்படுகிறார்.வரதர், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளில், கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் வரும், 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 25ல், கோவில் குளத்தில், தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.பிரம்மோற்சவம் முடிந்த பின், குளத்தில் உள்ள தண்ணீரை வெளியில் எடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் விடப்படுகிறது.இது குறித்து, கோவில் ஊழியர்கள் கூறியதாவது:அனந்தசரஸ் குளத்தில், தண்ணீர் மற்றும் சகதியின் அளவு குறித்து, தனியார் அமைப்பு மூலம், கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், 8 அடி தண்ணீர், 1.5 அடி ஆழத்தில் சகதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.பிரம்மோற்சவம் முடிந்ததும், சகதி மற்றும் தண்ணீரை அகற்றி, அத்தி வரதர் வைபவ ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மே., 4ல்), ஹிந்து அறநிலையத் துறை ஆணையர், பனீந்தர் ரெட்டி, வரதராஜ பெருமாள் கோவிலை பார்வையிட்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் பங்கேற்ற அதிகாரிகளிடம், அத்தி வரதர் வைபவ விழாவுக்கு, அந்தந்த துறை அதிகாரிகள், அதற்கான வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தி சென்றார்.
நான்கு இடங்களில் கார் பார்க்கிங்தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, அத்தி வரதரை தரிசிக்க, லட்சக்கணக்கானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வரும் கார்கள், நகர்ப்புறத்திற்கு வெளியில் நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஓரிக்கை, சர்வதீர்த்த குளம் எதிரில், பொன்னேரிகரை, டோல்கேட் ஆகிய நான்கு இடங்களில், கார்களுக்கு மட்டும், பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. அங்கிருந்து கோவிலுக்கு, மினி பஸ் இயக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட உள்ளது.