மேட்டுப்பாளையம் கொங்காளம்மன் கோவில் திருவிழா
மேட்டுப்பாளையம்:வேண்டுதலை நிறைவேற்றிய, அம்மனுக்கு, மண் குதிரைகளை சமர்பித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் பக்தர்கள்.மேட்டுப்பாளையத்தை அடுத்த மோத்தே பாளையத்தில் மிகப்பழமையான கொங்காளம்மன் கோவில் உள்ளது. எட்டுக் கைகளுடன் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 35 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கடந்த மாதம், 23ம் தேதி கிராம சாந்தியும், 24ம் தேதி பூச்சாட்டதலுடன் விழா துவங்கியது.
கடந்த, 7ம் தேதி வரை அம்மனுக்கு அலங்கார பூஜையும், வள்ளிக்கும்மி நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று முன் தினம் (மே., 8ல்) காலை அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து அலங்கார பூஜையும் நடந்தது. மதியம், வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, அலங்கரிக்கப்பட்ட மண் குதிரைகளை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பக்தர்களின் சார்பில், 14 குதிரைகளும், கோவில் சார்பில் ஒரு குதிரையும் என, 15 மண் குதிரைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலில் வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்பு மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைத்தனர்.எட்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒரு அலங்காரம் செய்யப்படும். நேற்று (மே., 9ல்) குதிரை வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.