புன்செய்புளியம்பட்டி அன்னை காமாட்சியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்
புன்செய்புளியம்பட்டி: அன்னை காமாட்சியம்மன் கோவிலுக்கு, அலகு குத்தி தேர் இழுத்தும், பறவை காவடி எடுத்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புன்செய்புளியம்பட்டி சேரன் வீதியில், அன்னை காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா ஏப்.,30ல்,
பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, முத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி, காமாட்சியம்மன்- ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம்
நடந்தது. நேற்று முன்தினம் (மே., 8ல்) இரவு, பக்தர்கள், அலகு குத்தி தேர் இழுத்தனர். பறவை காவடி எடுத்தும், நீண்ட வேல்கம்பு அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர், சிறுமியர் பால் குடங்களை எடுத்தும், பெண்கள் அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். நேற்று (மே., 9ல்) மதியம், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்று (மே., 10ல்)குத்துவிளக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.