உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கோவில்களில் மழை வேண்டி யாகம்

கிருஷ்ணகிரி கோவில்களில் மழை வேண்டி யாகம்

கிருஷ்ணகிரி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பருவ மழைகள் பொய்த்துப் போனதால், கடும் குடிநீர் தட்டுப் பாடும், வறட்சியும் நிலவுகிறது. அதனால், மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம்
(மே., 8ல்)தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா மேற்பார்வையில், மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த கன்னம்பள்ளி கிராமத்தில், வெங்கடரமண சுவாமி கோவிலில், மழை வேண்டி யாகம் நடந்தது. ஸ்ரீவிகாரி ஆண்டு நல்ல பருவ மழை பெய்து, நாடு செழிக்க, நடத்தப்பட்ட யாகத்தில், மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், வருண வேத மந்திரம் பாராயணம், வருணகாயத்ரி மந்திரா பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாமிதுரை செய்திருந்தார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆய்வாளர் சத்யா மற்றும் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர்.

இதேபோல், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு
யாகம் நடத்தப்பட்டது.

* ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி நேற்று முன்தினம் (மே., 8ல்) முதல் ஏழு நாட்களுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. மூலவர் சந்திரசூடேஸ்வரருக்கு எதிரே உள்ள பெரிய நந்தியை சுற்றி தொட்டி கட்டி, கழுத்தளவு தண்ணீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாதஸ்வரம், வயலின்,
புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு நடத்தப்பட்டது. அத்துடன்
சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழச்செய்து பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !