உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனமே விழித்தெழு

மனமே விழித்தெழு

நம்மை இயக்கும் மாபெரும் சக்தி மனம். மனம் வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஆனால் மனம் எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியாது. அதை உணர மட்டுமே முடியும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களால் நாம் இயங்குகிறோம். மூளை வேலை செய்யாவிட்டால் ஐம்புலன்கள் செயல் இழக்கும். எனவே தான் போதைப்பொருள் உட்கொண்டாலோ, தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டாலோ மனிதனால் செயல்பட முடிவதில்லை. உடல் இயக்கத்திற்கு கட்டளை இடுவது மூளை. அதற்கு  கட்டளை இடுவது எது என்று யோசியுங்கள்?  

பிடிக்காத ஒரு நபர், உங்களின் பிறந்த நாளன்று வாழ்த்து சொல்லி சுவீட் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  மூளை ஆரோக்கியமாக இருப்பதால் உங்களால் அதை வாங்க முடியும். ஆனால் வாங்காதே என மனம் தடுத்தால் முகத்தை திருப்பிக் கொள்வீர்கள் அல்லவா? மாறாக என்ன தான் பிடிக்காவிட்டாலும், பிறந்த நாளன்று வாழ்த்துகிறாரே.. சுவீட்டை வாங்கலாம் என நினைத்தால், அரை மனதுடன் வாங்குவீர்கள் தானே?

ஆக நம் செயல்பாட்டுக்கு மனம் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா!

சரி...ஒருநாள் அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்யலாம் என்கிறது உங்களின் மனம். மூளையும் கால்களுக்கு நடக்கும் சக்தியைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும், படுக்கையை விட்டு நீங்கள் எழுந்தால் தானே நடக்க முடியும்.
ஆனால் அலாரத்தை நிறுத்தி விட்டு மீண்டும் தூங்கி விடுகிறீர்களே ஏன்?

இதை புரிந்து கொள்ள வேண்டுமானால், நம்மை இயக்கும் மூன்றாவது சக்தி பற்றி தெரிய வேண்டும். அது தான் ’புத்தி’.  
’உனக்கு புத்தி கெட்டு விட்டதா...குடித்து விட்டு தெருவில் கிடக்கிறியே’, ’ எனக்கு புத்தி அப்போதே இருந்தால் அந்த பிளாட்டை நிச்சயம் விற்றிருக்க மாட்டேன்’, ’உனக்கு புத்தி இருந்தால் வேலையை இப்படி விட்டிருப்பாயா’ என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். ’நல்லது எது; கெட்டது எது’ ’இதைச் செய்யலாம், அதைச் செய்யக் கூடாது’ என மனதிற்கு கட்டளையிடும் சக்தியின் பெயர் புத்தி. எனவே தான் ” எனக்கு நல்ல புத்தியைக் கொடு” என்று கடவுளிடம் கேட்கிறோம்.
’கத்தியைத் தீட்டாதே, உன் புத்தியைத் தீட்டு’ என்ற நல்ல பாடலைக் கூட கேட்டிருப்பீர்களே!

மூளை, மனம் என்னும் இரண்டுடன் ’புத்தி’ என்ற சக்தியும் இணைய வேண்டும். இந்த மூன்றையும் இணைத்தால் மட்டுமே நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எதை செய்ய மறுக்கிறோம் என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்.  

மனதில் எத்தனையோ எண்ணங்கள் உதிக்கின்றன. ஆனால் அவை ’உன்னதமானதாக’ இருக்க வேண்டும் என்றால் அதற்கு நல்ல புத்தி வேண்டும். பாரதியாரின் பாடல் ஒன்றை உதாரணம் காட்டலாம்.

 ”தேடிச்சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர்வாட பலசெயல்கள் செய்து - நரை கூடி கிழப்பருவமெய்தி - கொடும் கூற்றுக் கிரையென பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைக் போலே -  நான்வீழ்வேன் என்று நினைத்தாயோ?

இதற்கு சான்றாக உண்மை சம்பவம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

1883ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த சம்பவம். மான்ஹாட்டன், புரூக்ளீன் என்னும் இடங்களை இணைக்க, வாஷிங்டன் ரூப்ளிங் என்பவர் பாலம் ஒன்றைக் கட்டினார்.
ஊரிலுள்ள பாலங்கள் எல்லாம் எதாவது இரண்டு பகுதிகளை இணைக்கத் தானே என நீங்கள் நினைப்பீர்கள். அதுவல்ல செய்தி. அவரைப் பின்னுக்குத் தள்ளிய தடைகளை எப்படி வெற்றி கண்டார் என்பது தான் விஷயமே.

1870ல் பாலம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஜான் ரூப்ளிங் என்ற ஒரு பொறியியல் வல்லுனருக்கும், அவரது மகன் வாஷிங்டன் ரூப்ளிங் என்பவருக்கும் தோன்றியது. அதற்கான வரைபடம் தயாரித்து, அரசுக்கு அனுப்பினர். சில தடைகளுக்குப் பின் பாலம் கட்ட அனுமதியும், அதற்கான நிதி உதவியும் கிடைத்தது. ஆனால் பணியை தொடங்கிய மூன்றாவது மாதத்தில் கட்டுமான இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஜான் ரூப்ளிங் இறந்தார். அவரது மகன் வாஷிங்டன் ரூப்ளிங்குக்குத் தலையில் அடிபட்டு மூளை பாதித்தது. பேச முடியாததோடு கை, கால் அசைவற்று போனார். பாலம் குறித்த விபரம் அனைத்தும் இருவருக்கு மட்டுமே தெரியும்.  வரைபடத்தை பாதுகாத்து வைக்க கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலம் அது.
இந்நிலையில் கட்டுமானத்தை கைவிடும் நிலை உருவானது.
ஆனால், வாஷிங்டன் ரூப்ளிங் மனதில் தந்தையின் கனவை நனவாக்கும் குறிக்கோள் எழுந்தது.  தன்னுடைய ஒரு விரலை மட்டுமே அசைக்க முடியும் என்ற நிலையிலும் பாலம் கட்ட துணிந்தார். மனசக்தியின் காரணமாக 13 ஆண்டுகள் விரலைத் தட்டித் தட்டி ஒரு புதிய கருத்து தகவல் மொழியை (இணிஞீஞு ஃச்ணஞ்தச்ஞ்ஞு)  உருவாக்கினார். பாலம் தொடர்பான விபரங்களை தனது மனைவி எமிலி ரூப்ளிங்குக்குப் புரிய வைத்தார். பணி தொடங்கப்பட்டு 1883ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 2 கி.மீ., தூரமுள்ள இப்பாலம் இல்லாவிட்டால், மான்ஹாட்டனிலிருந்து புரூக்ளின் வர 80 கி.மீ.,  தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். பாலத்தால் எவ்வளவு நேரமும், பணமும் மிச்சமாகும் யோசியுங்கள்?

அமெரிக்கா செல்பவர்கள் புரூக்ளின் பாலத்தைக் கண்டு வியக்காமல் இருக்க மாட்டார்கள்.

ஒருவரின் மனதில் உதயமான உன்னத குறிக்கோளின் வெளிப்பாடே பாலம். பாரதியாரின் வரிகளுக்கு இலக்கணமான செயல் திட்டம் தான் இது.   

இது போன்ற குறிக்கோள் நம் நாட்டினருக்கு வராதா என நீங்கள் நினைக்கலாம்.  

இந்தியாவின் கிராமம் ஒன்றில் வாழ்ந்த கூலித் தொழிலாளி யின் மனைவிக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. நகரத்திலுள்ள மருத்துவரை அழைத்து வர மலை ஒன்று தடையாக இருந்தது. தாமதம் ஏற்படவே மனைவி இறந்தார். அதன்பின் தொழிலாளியின் மனதில் உன்னத குறிக்கோள் உருவாகவே, அதை சாதித்து காட்டினார்.

அவரைப் பற்றி அறியும் முன்பு, உங்களின் மனதில் தோன்றும் உன்னத குறிக்கோளை ஒரு தாளில் எழுதி விட்டு காத்திருங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !